தென்னிலங்கையில் உள்ள சிரேஷ்ட அரசியல் வாதிகளுள், இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுசில் பிரேமஜயந்தவரும் ஒருவர்.
அரசியலில் அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம்வரை வந்தவர். நகரப்பிதா, மாகாண முதல்வர், பிரதி அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் என முக்கியமான பதவிகளை வகித்துள்ளார்.
அதுமட்டுமல்ல பலம்பொருந்திய அரசியல் கூட்டணியாக விளங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளராகவும் 10 ஆண்டுகள்வரை பதவி வகித்தவர். பல தேர்தல்களில் மஹிந்ததரப்பை வெற்றிபெற வைப்பதற்கு கட்சிக்கு நிர்வாக மட்டத்தில் சக்தி வழங்கியவர்.
இப்படியான ஒருவரைதான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிரடியாக நீக்கியுள்ளார். இந்த விவகாரம் ஆளுங்கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுசில் பிரேமஜயந்த சனிக்கிழமை நாட்களில் சந்தைக்கு செல்வது வழமை. கடந்த முதலாம் திகதியும் சந்தைக்கு சென்றார். அங்கு வந்த ஒரு ஊடகவியலாளர் ஒருவர், சேர், சந்தை நிலைவரம் எப்படி என்றும், நாட்டு நிலைவரம் எப்படி என்றும் கேட்க, விளாசித்தள்ளினார் சுசில்.
” அந்நிய ஆக்கிரமிப்பின்போதுகூட, எமது நாட்டு விவசாயம் இந்தளவுக்கு பாதிக்கவில்லை. ஆனால் தற்போது தவறான முடிவுகள் எடுக்கப்பட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எம்மை போன்றவர்கள் முடிவெடுக்கும் இடத்தில் இல்லை. ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளோம்.
விவசாயத்துறை அமைச்சர் ‘பெயில்’. உரியவகையில் செயற்படக்கூடிய – தகுதியானவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும்.” – என்றார் சுசில்.
அவரின் அந்த அறிவிப்பு தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலானது. தேசிய ஊடகங்களிலும் பிரதான செய்தியானது. இதனால் கடுப்பான சில அமைச்சர்கள் அது தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர். ஜனாதிபதியும் கடுப்பானார்.
திங்கள் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் கடும் சினத்தை வெளியிட்டார். மறுநாள் செவ்வாய்கிழமை இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டார்.
சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டமை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குகூட தெரியாதாம்.
சுசிலுக்கு அழைப்பை ஏற்படுத்திய பிரதமர் மஹிந்த,
“ சுசில், சிராந்தி சொல்லிதான் எனக்கே விடயம் தெரியும். உங்களுக்கு நடந்தது தொடர்பில் கவலை அடைகின்றேன்.” – என குறிப்பிட்டுள்ளார். ஆளுங்கட்சியில் உள்ள மேலும் சில உறுப்பினர்களும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனகூட சுசிலுடன் தொலைபேசிமூலம் உரையாடியுள்ளார்.
அதன்பின்னர் சந்திரிக்கா அம்மையாரும் சுசிலை தொடர்புகொண்டுள்ளார். மைத்திரிபால சிறிசேனவும் பேசியுள்ளார். இவ்வாறான புன்புலத்திலேயே சந்திரிக்கா அம்மையாளர் பங்கேற்ற நிகழ்வில் சுசில் பங்கேற்றார்.
