எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவது குறித்து அமைச்சர் மேலும் விளக்கமளித்தார்.
சுற்றுலா வீசாப் பெற்றுக்கொண்டு வெளிநாட்டவர்கள் இலங்கை வர முடியும் என்றும் இதனைத் தவிர இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் இலங்கைக்கு வர முடியும்.
எனினும், அவர்கள் இலங்கை வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொண்டு கொவிட் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் அத்தியாவசியமானது.
இதனைத்தவிர, கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் பி.சீ.ஆர். பரிசோதனை செய்யப்படும் என்றும் அதன் பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டல்களில் அவர்கள் ஒருவாரம் பாதுகாப்பு நடைமுறைகளுடன் தங்கவைக்கப்படுவர்.
இதேவேளை, குறித்த ஓட்டல்கள் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் இவ்வாறு ஒருவார காலத்தின் பின்னர் தேவையெனில் மீண்டும் பி.சீ.ஆர். பரிசோதனை செய்துகொண்ட பின்னர் அவர்கள் இலங்கையில் சுற்றுலாவை மேற்கொள்ளலாம்.
எனினும், சுகாதார நடைமுறைகளுடன் மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றி சுற்றுலாப் பயணிகளை அழைத்துவருவோர் அவர்களைக் கையாள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்டவர்களும் மிகவும் பாதுகாப்பான முறையில் அவர்களுக்கான சேவைகளை வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விளக்கமளித்தார்.