சூடானில் பேராபத்து: 10 லட்சம் பேர் பாதிக்கும் அபாயம்!

சூடானில் பரவும் புதியவகை காலரா தொற்று காரணமாக சுமார் 10 லட்சம்பேர் பாதிக்கப்படக்கூடும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவுகிறது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 2023-ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. இதனால் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் அரசாங்கம் திணறுகிறது.

இந்தநிலையில் தற்போது வாந்திபேதி எனப்படும் புதிய வகை காலரா தொற்று பரவல் தலைவிரித்தாடுகிறது. தலைநகர் கார்டூம் மற்றும் ஓம்டுர்மனில் இந்த பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கோர்டோபான், சென்னார், காசிரா உள்ளிட்ட பல மாகாணங்களில் காலரா தொற்று வேகமாக பரவுகிறது.
அதன்படி கடந்த 6 மாதங்களில் சுமார் 7 ஆயிரத்து 700 பேர் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர். தண்ணீரால் பரவும் இந்த காலரா தொற்று அதிக வயிற்று வலியை ஏற்படுத்தி உயிரையே பறிக்கும் அபாயம் உடையது. ஏற்கனவே நிலவும் உள்நாட்டு போருக்கு மத்தியில் காலரா தொற்றும் வேகமெடுத்ததால் அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 172 பேர் காலரா தொற்றுக்கு பலியாகினர். நிலைமை கைமீறிப் போனதால் அங்கு சுமார் 10 லட்சம் பேர் காலராவால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.நா.சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

.

Related Articles

Latest Articles