” நாட்டில் பல பிரச்சினைகள் நிலவும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பணத்தை செலவிடுகிறார்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச,
” நாட்டில் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு தினசரி உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இளைஞர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டு மக்கள் இவ்வாறு துன்படும்போது நாட்டின் பணத்தில் இருந்து 250 மில்லியன் ரூபா செலவளித்து கடற்படையின் கடற்படை கப்பலை ஹூதி கிளர்ச்சிக் குழுவினரை ஒடுக்குவதற்காக அனுப்ப அரசாங்கம் தீர்மானித்தது. இது பிரச்சினைக்குரிய விடயமாகும்.
நாட்டின் அத்தியாவசிய உள்ளக நடவடிக்கைகளுக்காக இருக்கும் பணம் ஹூதி கிளர்ச்சி குழுவினரை ஒடுக்குவதற்கு அனுப்பப்படும் வகையில், நாட்டின் கடனில் இருந்து குறைந்தது 25 பில்லியனையாவது குறைப்பதாக வெளிநாடுகள் உறுதியளித்துள்ளனவா என்பதை அறிய விரும்புகின்றோம். இதனால் என்ன பலன் என்று கேள்வி எழுப்புகின்றோம்.” – எனவும் சஜித் குறிப்பிட்டார்.










