” செங்கடல் பாதுகாப்பு விவகாரம் இலங்கைக்கும் நேரடியாக தாக்கம் செலுத்தக்கூடிய விடயமாகும். சர்வதேச ரீதியில் எமக்குள்ள பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அந்தவகையிலேயே கப்பல் அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக விசேட செலவீனங்கள் செய்யப்படவில்லை.”
இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
” இது அமெரிக்க பிரச்சினையோ அல்லது இஸ்ரேல் பிரச்சினையோ அல்ல. செங்கடல் பாதுகாப்பு விவகாரம் இலங்கைக்கும் நேரடியாக தாக்கம் செலுத்தும்.
கப்பல் போக்குவரத்தின்போது செங்கடலை பயன்படுத்தாமல் தென்னாபிரிக்காவுக்கு அப்பால் உள்ள வழியில் சென்றால் இங்கு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். அது எமது பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும்.
நாம் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரானவர்கள். அதனை ஒடுக்குவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது சர்வதேச ரீதியில் எமக்குள்ள பொறுப்பாகும். கிணற்று தவளைபோல் வாழ முடியாது.
எமக்கு பிரச்சினை ஏற்படும்போது உலகின் உதவி கோரப்படும். அதேபோல சர்வதேச மட்டத்தில் எமக்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் உள்ளது. அதனைதான் செய்துள்ளோம். இதற்காக மேலதிக செலவுகள் செய்யப்படவில்லை. தற்போதுகூட ஆழ்கடல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுதான் வருகின்றோம். இந்த சமுத்திர பாதுகாப்பு விடயத்திலும் எமது பொறுப்பு நிறைவேற்றப்படுகின்றது.” – என்றார்.










