டெல்லி – செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விசாரணை விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த அப்பாவி மக்களின் ஆன்மா சாந்தியடைய இந்த கூட்டத்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேசவிரோத சக்திகளால் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத சம்பவத்தை நாடு எதிர்கொண்டுள்ளது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவத்தின் மீதும் துளியளவும் சகிப்புத்தன்மை காட்ட முடியாது என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. கொடூரமான மற்றும் கோழைத்தனமான இந்த செயலை மத்திய அமைச்சரவை சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்கிறது என கூட்டத்துக்கு பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
முன்னதாக, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பூடானுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, டெல்லியில் தரையிறங்கிய உடன் நேராக எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் புதன்கிழமை சென்றார்.
காயமடைந்தவர்களை பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்து உரையாடியதாகவும், அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தியதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், மருத்துவமனையில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வருவோரின் உடல்நிலை, அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
டெல்லி – செங்கோட்டை அருகே திங்கட்கிழமை மாலை சுமார் 7 மணி அளவில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாலையில் வெடித்துச் சிதறிய காரை, காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி ஓட்டி வந்துள்ளார். குண்டுவெடிப்பில் அவர் உடல் சிதறி உயிரிழந்தார். அவரும் ஹரியானாவின் அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
அந்த மருத்துவக் கல்லூரியில் சக மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் உமர் முகமது நபி, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தனது காரில் டெல்லிக்குள் நுழைந்துள்ளார். போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க கார் இன்ஜின் பகுதியில் அவர் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்தார். இனிமேல் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி பதற்றத்தில் டெல்லி செங்கோட்டை அருகே தற்கொலை தாக்குதல் நடத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்தனர்.
