எதிர்வரும் பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஆப்பிள் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த வேட்பாளர்கள், செந்தில் தொண்டமானைச் சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
செந்தில் தொண்டமானை, பண்டாரவளையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த வேட்பாளர்கள், செந்தில் தொண்டமானின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது கரங்களைப் பலப்படுத்துவதற்காக உழைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவரது வெற்றி மூலமாக எமது சமூகத்துக்கு ஊவா மாகாணத்தில் பாதுகாப்பும் அபிவிருத்தியும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து ஆப்பிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கருத்து வெளியிடுகையில்,
“பதுளை மாவட்டத்தில் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காகவே பல்வேறு சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோரின் தரகர்களாகவே சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர்.
நான்கு இலட்சம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோருக்கு 2 சுயேட்சைக் குழுக்களும் ஒரு இலட்சம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தோருக்கு 10 சுயேட்சைக் குழுக்களும் பதுளையில் போட்டியிடுகின்றன. சுமார் 14 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டால் பாராளுமன்றம் செல்லலாம் என எமக்குச் சொல்லப்பட்டது.
அதில் நாம் ஆயிரத்து 500 வாக்குகளைப் பெற்றால் போதும் என்றார்கள். அதனால் நாங்கள் சூட்சுமமாக ஏமாற்றப்பட்டோம். தேர்தல்கள் ஆணைக்குழுவால் பதுளை மாவட்டத்தில் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். அவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐந்து இலட்சம் வாக்காளர்கள் கொண்ட பதுளை மாவட்டத்தில் ஓர் உறுப்பினர் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறவேண்டியுள்ளது.
இவர்கள் சொல்வது போன்று 14 ஆயிரம் அல்லது 15 ஆயிரம் வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் இந்த மாவட்டத்தில் 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள்.
கடந்த கலங்களில் பராளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணி 25 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. பாராளுமன்றத்துக்கு ஓர் உறுப்பினரை அவர்களால் தெரிவு செய்ய முடியாமல் போனது.
அவ்வாறான சூழ்நிலையில் சிறுபான்மை இனத்தவர்கள் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகக் கூடாது என்பதற்காக பெரும்பான்மை இனத்தவர்கள் எங்களை கருவிகளாகப் பயன்படுத்தினர். இன்று சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என நாம் சிந்தித்தோம். ரணில் கட்சியிலோ சஜித் கட்சியில் இருப்பவர்களுக்கு வாக்களிக்கும் போது எந்தவிதமான பிரயோசனமும் எமக்கு இல்லை.
ஏனென்றால், கடந்த தேர்தலில் அவர்கள் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்றார்கள். அதில் 15 இலட்சம் வாக்குகள் வடக்கு கிழக்கு மக்களால் அளிக்கப்பட்டவை. மிகுதி உள்ள 40 இலட்சம் வாக்குகளை தற்போது ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் பிரித்துக்கொண்டுள்ளார்கள். ஆதலால் தலைகீழாக இருந்தாலும் அவர்களால் ஆட்சியமைக்க முடியாது. உடைந்த பஸ்ஸில் டிக்கட் எடுத்து பயணிப்பதை விட ஒழுங்கான, பாதுகாப்பான பஸ்ஸில் பயணிப்பது மேலானது.
அதனாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்சவின் பஸ்ஸில் பயணிக்கத் தயாரானோம். செந்தில் தொண்டமான் சக்தி வாய்ந்த அரசாங்கத்தில் முக்கிய பதவியை வகிப்பார். அனைவருக்கும் சேவையாற்றுவார். அவரிடம், இன, மத, குல வேறுபாடுகள் கிடையாது. ஊவா முழுவதும் செந்தில் தொண்டமானுக்கான ஆதரவு பெருகிவருகின்றது. பதுளை மாவட்டத்தில் அவர் சாதனை படைப்பார். அதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம்.” – என்றனர்.