சென்னை – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை!

சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் சென்னை – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு அரங்கேறும் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதுகின்றன.

இந்த சீசனை இரு வெற்றியுடன் (பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக) அட்டகாசமாக தொடங்கிய சென்னை அணி அடுத்த இரு ஆட்டங்களில் (டெல்லி, ஐதராபாத்துக்கு எதிராக) தோல்வியை தழுவியது. அதாவது உள்ளூரில் மட்டும் வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறது. மறுபடியும் சொந்த ஊரில் ஆட இருப்பதால் வெற்றிக்கு பாதைக்கு திரும்ப முடியும் என்று சென்னை அணியினர் நம்புகிறார்கள்.

முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 165 ரன் மட்டுமே எடுத்த சென்னை அணி அந்த ஸ்கோரை வைத்து எதிரணியை மடக்க முடியவில்லை. தோல்வி கண்ட இரு ஆட்டத்திலும் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும், ரச்சின் ரவீந்திராவும் சோபிக்கவில்லை.

மிடில் வரிசையில் அஜிங்யா ரஹானே, ஷிவம் துபே கைகொடுத்தாலும் பெரிய அளவில் ஸ்கோரை எட்ட முடியவில்லை. தாயகம் சென்றதால் கடந்த ஆட்டத்தில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் இன்றைய போட்டியிலும் விளையாடுவாரா என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை.

சென்னைக்கு நிகராக கொல்கத்தாவும் வலுவாக திகழ்கிறது. இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களிலும் (ஐதராபாத், பெங்களூரு, டெல்லிக்கு எதிராக) வெற்றிக்கனியை பறித்துள்ள கொல்கத்தா எல்லா ஆட்டங்களிலும் குறைந்தது 185 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது. குறிப்பாக டெல்லிக்கு எதிராக 272 ரன்கள் திரட்டி மலைக்க வைத்தது.

தொடக்க வீரராக வரும் சுனில் நரின், பில் சால்ட் மற்றும் ஆந்த்ரே ரஸ்செல் அதிரடியில் வெளுத்து வாங்குகிறார்கள். சிறிது நேரம் நின்றாலும் எதிரணியை கண்டமாக்கி விடுகிறார்கள். இவர்களை கட்டுப்படுத்துவது தான் சென்னை அணிக்கு சவாலாக இருக்கும்.ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் சென்னையும், 10-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் 10 முறை மோதி இருக்கின்றன. இதில் 7-ல் சென்னையும், 3-ல் கொல்கத்தாவும் வாகை சூடியுள்ளன.

Related Articles

Latest Articles