இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 20 சதவீதமாகக் குறைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல உலக நாடுகளை இலக்குவைத்து புதிய வர்த்தக வரிகளை அறிவித்திருந்தார். குறித்த வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் நிலையில சில நாடுகளுக்கு புதிய வர்த்தக வரி விதிப்புக்களை அறிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 வீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 வீத வர்த்தக வரி விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இலங்கை முன்னெடுத்த இராஜதந்திர முயற்சிகளால் அது 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
அதன்பின்னரும் வரியை குறைத்துக்கொள்வதற்குரிய பேச்சுகள் தொடர்ந்தன. இந்நிலையிலேயே தற்போது 20 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் வரி விதிப்பு அமுலுக்கு வரவுள்ளது.