செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இனங் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அதற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவாக்கல் பணியின்போது மேலும் சில மனித என்புகள் இனங்காணப்பட்டுள்ளன. மனித என்பு எச்சங்கள் தென்பட்ட பகுதியில் தற்போது அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரையில் 47 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 11ஆம் நாளான நேற்றும் இரு என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன.
இந்தநிலையில், ஏற்கனவே அகழ்வு நடைபெறும் பகுதிக்கு வெள்ள நீர் செல்வதைத் தடுக்கும் நோக்கில், அகழ்வு நடைபெறும் இடத்துக்கு அருகில் நேற்றுத் துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்போது அங்கும் மனித என்பு எச்சங்கள் தென்பட்டதை அடுத்து அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.
என்பு எச்சங்கள் தென்பட்டதை அடுத்து, ஆய்வுகளின் பின்னர் அங்கும் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரியவருகின்றது.