போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மே மாத நடுப்பகுதியில் ஆரம்பமான அகழ்வாராய்ச்சிகளுக்கு அமைய அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக இது மாறியுள்ளது.
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் அகழ்வாய்வில் சிறுவர்கள் உட்பட 102 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதோடு, கண்டறியப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 115 ஆக உயர்வடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி ரணிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார்.
தடயவியல் அகழ்வாய்வுத் தளம் 1 இல், ஒரு பெரிய எலும்புக்கூடுக்கு அருகில், இன்று ஒரு குழந்தையின் எலும்புக்கூடு மீட்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.
”நேற்றைய அகழ்வின்போது ஒரு பெரிய எலும்புக்கூட்டோடு குழந்தையின் எலும்புக்கூடு ஒன்று அரவணைக்கப்பட்ட விதத்தில் காணப்பட்டது. அது முழுமையாக இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது.”
மனித எலும்புகளுடன், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களில் குழந்தை பால் போத்தல், குழந்தைகள் விளையாடும் பொம்மை, காலணிகள் மற்றும் பாடசாலை பைகள் ஆகியவை அடங்கும்.
தற்போது தோண்டப்படும் பகுதிக்கு அப்பால் மனித எலும்புகள் இன்னும் உள்ளனவா என்பதைக் கண்டறிய, அந்த இடத்தை ஸ்கேன் பரிசோதனை செய்ய ஜூலை 25 அன்று பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சிடமிருந்து புதிய அனுமதி தேவையில்லை எனவும், பாதுகாப்பு அமைச்சிடமிருந்து புதிதாக அனுமதி பெற தேவைப்படாத ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கேன் இயந்திரத்தின் ஊடாக ஓகஸ்ட் 4 ஆம் திகதி ஆய்வுகளை நடத்த எதிர்பார்ப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, நேற்றைய தினம் (ஜூலை 29) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
எலும்புக்கூடுகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி சித்துப்பாத்தி மயான பூமியில் அகழ்வாராய்ச்சிகள், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், மே 15, 2025 ஆரம்பமானது.