” செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். இந்த விடயங்களைச் சரியான முறையில் ஆராய்ந்தாலே நாட்டில் நடைபெற்ற பலவிதமான சர்வதேசக் குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள் வெளிவரும்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் அகழ்வுப் பணிகளில் முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
” செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதி மயானமாக இருப்பதனால் ஒரு சில முறையாக புதைக்கப்பட்ட என்புத் தொகுதிகளும் கண்டறியப்படலாம். ஆனால், அவற்றை இலகுவாகக் கண்டறிந்து கொள்ள முடியும்.
கொக்குத்தொடுவாய், மன்னார், மாத்தளை போன்ற இடங்களிலும், 1994களுக்குப் பின்னர் தெற்கிலே சில இடங்களில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுடன் சம்பந்தப்பட்ட அனுபவமுடையவர்கள் இருந்தாலும் கூட மனிதப் புதைகுழியில் இருந்து அகழப்படும் என்புத் தொகுதிகள் பற்றிய பரிசோதனையைச் செய்வதற்கான நிபுணத்துவம் இலங்கையில் இல்லை. உலகில் ஒரு சில பல்கலைக்கழகங்களில் மாத்திரமே அந்தத் தொழில்நுட்பம் உள்ளது.
அகழ்ந்தெடுக்கப்படுபவை யாருடைய எச்சங்கள் என்பது அடையாளம் காணப்படுவது மிக முக்கியமானது.
அகழப்படும் என்புத் தொகுதிகளை ஆய்வுக்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவதற்கு முன்னர் சான்றுப்பொருள்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது போன்ற நிபுணத்துவங்கள் கூட சர்வதேச நிபுணர்கள் இடத்தில் இருந்தே பெற வேண்டியனவாக உள்ளன.” எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
ஆகவே, செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். இந்த விடயங்களைச் சரியான முறையில் ஆராய்ந்தாலே நாட்டில் நடைபெற்ற பலவிதமான சர்வதேச குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள் வெளிவரும்.
சர்வதேச நிபுணர்களை வரவழைத்து அவர்களுடைய கையிலே செம்மணி விடயத்தை ஒப்படைக்க வேண்டும். என்புத் தொகுதிகள் பற்றிய பரிசோதனையை மேற்கொண்டு அறிவிக்கும் பொறுப்பு முழுவதும் சுயாதீனமாகச் செயற்படுகின்ற சர்வதேச நிபுணர்களிடத்தே கையளிக்கப்பட வேண்டும்.
சர்வதேச நிபுணத்துவத்தைப் பெறுவதற்கான நகர்வுகளை வேறு வழிகளிலும் மேற்கொண்டு வருகின்றோம். வரும் நாள்களில் நீதிமன்றம் ஊடாக ஏதாவது கட்டளைகள் பெறப்பட வேண்டிய தேவை ஏற்படின் அந்தக் கருமங்களிலும் ஈடுபடுவோம்.” – என சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.
