“ செம்மணி படுகொலை வழக்கில் சர்வதேச கண்காணிப்பு விசாரணைக்கு ஜனாதிபதி அநுர உடன்பட வேண்டும். அதிலே, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வேண்டும்.”- என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அத்துடன், இவற்றுக்கு முன்னர், இன்று சிறையில் இருக்கும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவுக்கு உடனடியாக அதியுயர் விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
” கிருஷாந்தி குமாரசுவாமி மட்டும் அல்ல, இன்னமும் பல நூற்று கணக்கானோர் கொலை செய்யபட்டனர். இதை நான் 1998ம் வருடமே என் சாட்சியத்தில் சொன்னேன்.
இன்று ஐந்து அல்லது ஆறு மனித புதை குழிகள் கண்டு பிடிக்கபட்டுள்ளன. நான் சொன்னது உண்மை ஆகி உள்ளது. மொத்தமாக 250 முதல் 300 பேர் வரை சித்திரவதைக்கு உள்ளாகி கொன்று புதைக்க பட்டார்கள். இன்று தண்டனைக்கு உள்ளாகி இருக்கும் நானும், ஏனைய நால்வரும் மட்டும் இத்தனை பேரை கைது செய்து, சித்தரவதை செய்து, கொன்று, குழி வெட்டி, புதைக்க முடியுமா.?”
“..யாழ்ப்பாணத்துக்கு செல்லும் பிரதான, சாலையில் அமைந்துள்ள, செம்மணி காவல் சாவடியில், பகல் நேரங்களில், அடையாளம் காட்ட படுவோர், உடன் கைது செய்ய பட்டு, இராணுவ ட்ரக்கில், ஏற்ற பட்டு, 7ம் இராணுவ படை தலைமையகத்துக்கு கொண்டு செல்ல பட்டு, விசாரணை என்ற பெயரில், சித்திரவதைக்கு உள்ளாக்க பட்டு, கொல்ல பட்டு, சடலங்களாக இரவு மீண்டும் செம்மணி காவல் சாவடிக்கு கொண்டு வரப்படுவர்.
மேலதிகாரிகளின் கட்டளை படி நாம் அந்த சடலங்களை அங்கே புதைப்போம். தொடர்ந்து புதைத்தோம். இதுதான் நடந்தது. கொலை செய்த மேலதிகாரிகள் தப்பி விட்டனர். புதைத்த நாம் தண்டனைக்கு உள்ளாகி உள்ளோம்.
சில மேலதிகாரிகள் கைதாகி வழக்கு தொடர பட்டு, பின் அந்த வழக்கு நின்று போய் விட்டது. அதிகாரிகள் தப்பி விட்டார்கள். நாம் அகப்பட்டு உள்ளோம். இது அநீதி. சர்வதேச விசாரணை நடக்கும் பட்சத்தில் நான் சாட்சியம் அளித்து குற்றம் இழைத்த அதிகாரிகளின் பெயர்களை வெளி படுத்த தயாராக உள்ளேன்.”
லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனது மனைவி திருமதி எஸ்.சி.விஜேவிக்கிரம மூலம் இவ்வாறு கூறி உள்ளதாக மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் மனைவி திருமதி எஸ்.சி.விஜேவிக்கிரம, ஜனாதிபதி அனுர குமாரவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் நகல்களை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் அனுப்பி உள்ளார். ஐநாவுக்கும் அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில் தனது கணவர் தன்னிடம் கூறிய மேற்கண்ட விடயங்களை, அவர் எழுதியுள்ளார். ஆகவே இன்று இந்த கடிதம், அனுரகுமார திசாநாயக்கவின் “கோர்ட்டில்” இன்று நிற்கிறது.
எனவே. சர்வதேச கண்காணிப்பு விசாரணைக்கு ஜனாதிபதி அனுர உடன் பட வேண்டும்.” எனவும் மனோ கணேசன் மேற்படி அறிக்கை ஊடாக வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில், அரசியல் சிவில் சமூகமாக நாம் கூட்டு மேல் நடவடிக்கைக்கு தயார் ஆவோம். ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிடம் கோரிக்கை நாம் அதிகார பூர்வமாக கோரிக்கை விடுப்போம்.
பிரசித்தி பெற்ற சித்திரவதை, பாலியல் வல்லுறவு, படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என்கிறார். இலங்கை வரலாற்றில் இப்படி ஒரு இராணுவதை சேர்ந்த நபர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என கூறவில்லை.
ஆகவே, இதை ஏற்று மேல் நடவடிக்கை எடுக்க அனுர குமார அரசாங்கம் முன் வர வேண்டும். சர்வதேச நெருக்குதல்களை முறையாக தர ஐநா மனித உரிமை ஆணையகமும் முன் வர வேண்டும். இதை செய்ய முடியா விட்டால், இது ஒரு அரசாங்கமாகவோ, அது ஒரு ஐநா சபையாகவோ இருக்க முடியாது. இது இன்று சர்வதேச விவகாரம் ஆகி விட்டதை அனுர குமாரவும், வொல்கர் டர்க்கரும் உணர வேண்டும். அதனால்தான், அனுரவுக்கு செம்மணி விவகாரம் ஒரு அக்னி பரீட்சை என்று அன்றே சொன்னேன். இன்று மீண்டும் கூறுகிறேன்.” என மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.