இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
1000 படங்களுக்கு மேல் இசையமைத்து தமிழ் சினிமாவில் இசை என்றாலே முதலில் நினைவுக்கு வரும் பெயராக இருப்பது இளையராஜா தான். ஒரு காலத்தில் மிகவும் பிஸியான இசையமைப்பாளராக இருந்த அவர் சென்னை வடபழனியில் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவில் தான் அனைத்து பணிகளையும் செய்வார். கடந்த 40 ஆண்டுகளாக அதே ஸ்டூடியோவில் தான் பணியாற்றி வந்தார். மொத்த சினிமா துறையும் இசைக்காக அந்த ஸ்டுடியோவிற்கு தான் செல்லும். அந்த அளவுக்குப் பிரபலமாக இருந்தது அது.
இந்நிலையில் சென்ற வருடம் ஸ்டுடியோ நிர்வாகம் மற்றும் இளையராஜா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை எழுந்தது. இதன் காரணமாக இளையராஜாவின் ரிக்கார்டிங் ஸ்டூடியோவை நிர்வாகம் பூட்டியது. அது தொடர்பான பிரச்சினை இன்னும் நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இது தொடர்பாக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். அது ஒரு புறமிருக்க, இன்று இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவின் உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில் இசைக் கருவிகள் திருடு போனதாகவும் தன்னுடைய அறையிலிருந்த இசைக் குறிப்புகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி இருக்கிறார்கள் என புகார் வைத்திருக்கிறார். இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது..
மேலும் பிரசாத் ஸ்டூடியோ உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதிலிருந்து வெளியேறி இருக்கும் இளையராஜா சொந்தமாக சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு தியேட்டரை தன்னுடைய ரெக்கார்டிங் ஸ்டுடியோ மாற்றி உருவாக்கி வருகிறார் என கூறப்படுகிறது. அந்த ஸ்டூடியோ விரைவில் செயல்படத் துவங்கும் என தெரிகிறது. அதற்கு ராஜா ஸ்டுடியோ என பெயரிடப் படலாம் என்றும் சினிமாத் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 40 வருடங்களாக பிரசாத் ஸ்டுடியோவில் பாரதிராஜா இருந்த நிலையில் அந்த ஸ்டுடியோ நிர்வாகத்திற்கும் இளையராஜாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது எப்படி என பார்ப்போம்.
பிரசாத் ஸ்டுடியோவை உருவாக்கிய எல். வி. பிரசாத் அவர்கள் தான் இளையராஜாவுக்கு அந்த அறையை கொடுத்திருந்தார். அதில் தான் கம்போஸிங் உட்பட அனைத்து பணிகளையும் இளையராஜா செய்து வந்தார். அதற்குப் பிறகு எல் வி பிரசாத்தின் மகன் ரமேஷ் பிரசாத் வசம் நிர்வாகம் சென்ற பிறகும் இளையராஜாவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார். அதனை தொடர்ந்து அவரது மகன் சாய் பிரசாத் நிர்வாகத்திற்கு வந்த பிறகு தான் இளையராஜாவுடன் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. ஸ்டுடியோ தொழில் நஷ்டத்தில் இருப்பதால் இளையராஜா இருக்கும் இடத்திற்கு மாத வாடகை கொடுக்க வேண்டுமென சாய் பிரசாத் கேட்டிருக்கிறார். அதற்கும் இளையராஜா தரப்பு ஒப்புக் கொண்டிருக்கிறது. அதற்காக அக்ரிமெண்ட் போட்டுக் கொள்ளலாம் என்றும் இளையராஜா தரப்பு கூறுகிறது. ஆனால் சில தினங்களுக்கு பிறகு இளையராஜாவை காலி செய்யச் சொல்லி கேட்டிருக்கிறார் சாய் பிரசாத். அந்த இடத்தை இடித்துவிட்டு வேறு ஸ்டுடியோ கட்டப் போவதாக அவர் தெரிவித்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் இளையராஜாவுக்கும் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கும் பிரச்சனை துவங்கியிருக்கிறது.
அதற்கு பிறகு இளையராஜாவுக்கு ஆதரவாக பாரதிராஜா உள்ளிட்ட சில சினிமா துறை பிரபலங்கள் ஸ்டூடியோ நிர்வாகத்தை எதிர்த்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்படி துவங்கிய பிரச்சனை தற்போது முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
– நன்றி சமயம் தமிழ்.கொம்