இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசியசபை எப்போது கூடுமென பலரும் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றனர்.
இ.தொ.காவின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர், அவ்வமைப்பின் தொழிற்சங்க பிரிவு மற்றும் அரசியல் கிளைகளுக்கான தலைமைப்பதவி இன்னும் வெற்றிடமாகவே காணப்படுகின்றது.
பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் தேசிய சபை கூடியே ஜனநாயக முறைப்படி புதிய தலைவரை தெரிவுசெய்யும் என தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜீவன் தொண்டமானுக்கு பொதுச்செயலாளர் பதவி கையளிக்கப்படும்போதும் அதே அறிவிப்புதான் விடுக்கப்பட்டது.
தற்போது தேர்தல் முடிவடைந்துவிட்டது. விரைவில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இ.தொ.காவின் தேசிய சபை எப்போது கூடுமென பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
ஆகஸ்ட் 30 ஆம் திகதியே அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் ஜனன தினமாகும். அன்றைய தினம் தேசிய சபை கூடி புதிய தலைவரை தெரிவுசெய்யலாம் என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
எனினும், காங்கிரஸ் தரப்பிலிருந்து இது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.