‘ஜனவரி மாதத்துக்குள் 1000 ரூபா இல்லையேல் போராட்டம் வெடிக்கும்’

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் எனவும், மாதம் 25 நாட்கள் வேலை அவசியம் எனவும் வலியுறுத்தி ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மலையக சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தலையில் கறுப்பு பட்டி அணிந்து, ஆயிரம் வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் இதை தொழிலாளர்கள் சார்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததுடன், அரசாங்கம் உறுதியளித்தப்படி தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளத்தினை 1000 ரூபாவாக பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் இதை இழுத்தடிப்பு செய்வதற்கு இடமளிக்க கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இம்மாதம் முடிவதற்குள் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும், அப்படி இது இழுத்தடிப்பு செய்யும் பட்சத்தில் கடந்த காலங்களை போல் ஏமாற்றம் செய்யாது குறிப்பிட்ட காலத்திற்கான நிலுவை பணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகவும், மலையகத்தில் உள்ள ஏனைய பல்வேறு இடங்களிலும் இப்போராட்டத்தினை விஸ்தரிக்கவுள்ளதாகவும் மலையக சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்தார்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles