ஜனாதிபதியிடம் ஏழு கோரிக்கைகள் முன்வைப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை நடத்திய பயங்கரவாதக் குழுவின் தலைவர் என கருதப்படும் சஹ்ரானுக்கும், இராணுவப் புலனாய்வு பிரிவுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராயர், இது தொடர்பில் ஜனாதிபதியிடம் ஏழு கோரிக்கைகளை முன்வைத்தார். இதன்போதே மேற்கண்ட வலியுறுத்தலையும் விடுத்தார்.
‘நாடாளுமன்ற நூலகத்தில் மட்டும் தற்போது வைக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து மக்கள் பார்வைக்கு அதனை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகள் கண்காணிப்பதற்கும், வழக்குகளை தொடுப்பதற்கான முழுமையான அதிகாரம் உடைய வழக்குரைஞர் அலுவலகமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைத்து சக்திகளையும் அடையாளம் கண்டு, உண்மையை மக்களுக்கு பகிரங்கப்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள், எந்த தரத்தில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள அனைத்து பரிந்துரைகளும் அமுல்படுத்தப்படவேண்டும்.
பயங்கரவாத குழுவின் தலைவர் சஹ்ரானுக்கும், இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் அது தொடர்பில் சனல் – 4 தொலைக்காட்சியில் வெளியான வேலைத்திட்டம் சம்பந்தமாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். பிரதான சாட்சி அதான் மௌலானின் சாட்சியம் தொடர்பிலும் விசாரிக்கப்பட வேண்டும்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட இமாம் குழுவின் விசாரணை அறிக்கையை ஏற்கமுடியாது.” – என்றார்.