“ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு என்பதை ஏற்க முடியாது. அந்த ஒரு காரணத்துக்காகவே ஜனாதிபதியின் நாடாளுமன்ற கொள்கை விளக்க உரையை நிராகரிக்கின்றோம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
“ஜனாதிபதி தனது உரையில் ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு என்று கூறினார். அப்படி ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள முடியாது. அது என்னவென்பது மற்றெல்லோரையும்விட ஜனாதிபதிக்கு மிக நன்றாகவே தெரியும்.
சமஷ்டி ஆட்சி முறை என்ற அடிப்படையில் ஜனாதிபதி பரப்புரை செய்திருக்கின்றார். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, கடந்த நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாக இயங்குகையில் அதன் வழிகாட்டல் குழுவின் தலைவராக இயங்கியபோது எல்லாம் அவர் மிகக் குறிப்பாக சமஷ்டி அரசுக்காகத் தான் நிற்கின்றார், போராடுவார் என்று கூறியிருக்கின்றார். இப்போது, அவர் அப்படியே தலைகீழாகக் குத்துக்கணரம் அடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல ‘ஒற்றையாட்சி’க்குள் என்று வேறு சொல்கின்றார். அதுவும் கப்பிட்டல் யு மற்றும் கப்பிட்டல் எஸ் எழுத்துக்களைப் பயன்படுத்திச் சொல்கின்றார். அவை குறிப்புணர்துபவை என்னவென்றால் ஆட்சிப் பொறிமுறை ஒற்றையாட்சியாக இருக்கும் என்பதுதான். அத்தோடு, ”நான் இந்த நாட்டை பிரிப்பதற்கு அனுமதிக்கமாட்டேன்” என்றும் சொல்லியிருக்கிறார். நாங்களும் இந்த நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால், அதிகாரங்களை அர்த்தமுள்ள வகையில் பகிருங்கள். ஒற்றையாட்சி முறைக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு நடக்க முடியாதது. அந்த ஒரு காரணத்திற்காகவே ஜனாதிபதியின் உரையை நாம் நிராகரிக்கின்றோம்.” – எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
