நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி விடுப்பாரென ஆளுங்கட்சி தகவல் வெளியிட்டுள்ள நிலையில், இது தேர்தல் நாடகமென எதிரணிகள் சாடியுள்ளன.
களனி ஆற்றிலிருந்து நாகம் வருகின்றதெனக்கூறி கோட்டாபய ராஜபக்ச வாக்குவேட்டை நடத்திய நாடகத்தின் 2 ஆம் பாகமாகவே ஜனாதிபதியின் அறிவிப்பு அமையும் எனவும் எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ,
“ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற பின்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது எனவும் கூறவுள்ளார். ஆனால் நாடு மீண்டுவிட்டது என்ற அறிவிப்பை அவர் இதற்கு முன்னரும் விடுத்திருந்தார்.
எனவே,தேர்தல் நாடகமாகவே இது அரங்கேற்றப்படவுள்ளது.
களனி ஆற்றில் நாகம் வந்தது என நாடகமாடி கோட்டாபய ராஜபக்ச வாக்கு திரட்டினார், தற்போது வங்குரோத்து நிலையில் இருந்து நாடு மீண்டுவிட்டது எனக்கூறி பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து விழா எடுத்து வாக்கு திரட்ட ஜனாதிபதி தயாராகின்றார்.
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என கடன் வழங்கும் நிறுவனங்கள் பட்டியலிடவில்லை. எனவே, இந்த கண்துடைப்பு நாடகத்தை மக்கள் நம்பக்கூடாது” – என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களே இது தொடர்பான அறிவிப்பை விடுக்க வேண்டும், மாறாக ஜனாதிபதி விடுப்பதில் பயன் இல்லை என்று தேசிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.