“ ஸ்மார்ட் நாட்டை உருவாக்கி வருவதாக கூறி, நாட்டின் சட்டத்தையும், அமைச்சரவை தீர்மானங்களையும் மீறி மின்கட்டணத்தை அதிகரிக்கும் செயல்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது. இதனால் ஸ்மார்ட் நாடொன்று உருவாகாது.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வட கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஓராண்டில் முறைகேடாக 3 தடவைகள் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு கட்டணங்களை அதிகரித்து விட்டு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் வீராப்பு பேசி வருகிறார் , எவ்வளவு தான் நீர் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டாலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டண திருத்தத்தை மேற்கொள்வதாக கூறுவதை அனுமதிக்க முடியாது ,இது ஸ்மார்ட் நாட்டுக்கான பண்பல்ல.
ஜனாதிபதி கூறும் ஸ்மார்ட் நாட்டில் விலை அதிகரிப்பும், விற்பனையுமே காணப்படுகின்றது. பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டும் லிட்ரோ கேஸ் நிறுவனத்தைக் கூட விற்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது,
நாட்டின் தலைவர்களுக்கு மக்கள் மீதான உணர்திறன் இல்லை , நாட்டு மக்கள் அழுத்தத்திற்கு உள்ளாகும் போது, நாட்டின் ஜனாதிபதி மேலும் மேலும் விலைகளை அதிகரித்தும் சொத்துக்களை விற்பனை செய்தும் நாட்டு மக்களை கொன்று குவித்து வருகிறார்.
நாட்டில் புத்திஜீவிகள் வெளியேற்றம் ஏற்பட்டுள்ள இவ்வேளையில், நாட்டிற்குத் தேவை துன்பங்களைத் தீர்க்கும் தலைமைத்தும் தேவைப்படுகின்றது. இதற்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.” – என்றார்.










