” நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்காகவே அரசியல் ரீதியில் பல தியாகங்களை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி செய்தது. எனினும், அரசால் மக்கள் நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படாவிட்டால் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் உரிமை கட்சிக்கு உள்ளது.” – என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் மின் கட்டணம் அதிகரித்துள்ளது, மக்களின் வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் புதிய வரிகளை அறவிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பில் பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடாமலேயே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மொட்டுகட்சிமீதே குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது.
அமைச்சரவையை மறுசீரமைக்கும் உரிமை ஜனாதிபதிக்கு இருக்கின்றது. ஆனால் பதவி மாற்றங்களிலும்போது பங்காளிகளுடன் ஆலோசனை பெறுவது நல்லது. அதேபோல பதவியை மாற்றிவிட்டால் பிரச்சினை தீரும் என்ற எண்ணமும் தவறு. எனவே, பாதீட்டிலாவது மக்கள் நல திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் கோருகின்றோம்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தியே மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது என ஜனாதிபதி கூறினார். இது பற்றி அவர் பங்காளிகளுடன் பேசவில்ல.
நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தவே நாம் தியாகங்களை செய்தோம். எதிர்காலத்திலும் செய்வோம். ஆனால் அதன் நன்மை மக்களை சென்றடைய வேண்டும். மக்களுக்கு நன்மை பயக்காவிட்டால் அதற்கு எதிராக குரல் எழுப்பும் உரிமை எமக்கு உள்ளது. கூட்டணி அரசியல் உரிமையை ஜனாதிபதி மதித்து செயற்படுவார் என நம்புகின்றோம்.” – என்றார்.










