ஜனாதிபதி கோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார் – அர்ஜுன ரணதுங்க தெரிவிப்பு

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவின் கொள்கைகள் சிறப்பானதாக அமையும் பட்சத்தில் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்- என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமான் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பில் விவரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நான் தற்போது ஐக்கிய தேசியக்கட்சியிலேயே அங்கம் வகிக்கின்றேன். அக்கட்சி எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா, வெளியேறுவதா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும். நான் மக்களுடன், மக்களுக்காகவே அரசியல் நடத்துகின்றேன்.

நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளே எமக்கு தேவைப்படுகின்றனர். இதன்காரணமாகவே  எப்போதும் நல்ல அரசியல்வாதிகளுடன் பயணத்தை தொடர்ந்தேன்.

கோட்டாபய ராஜபக்ச எனது சகோதரர் போன்றவர். ராஜபக்சக்களுடன் எமக்கு நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. மஹிந்த ராஜபக்சவே இந்நாட்டிலுள்ள புகழ்மிக்க அரசியல்வாதியாவார். எனது பிறந்தநாளன்று அவரே என்னை முதலில் வாழ்த்துவார். நாமும் அவருக்கு உரிய வகையில் கௌரவம் செலுத்துவோம். ஆனால் அரசியில் கொள்கை ரீதியில் சிற்சில முரண்பாடுகள் உள்ளன.

அதேவேளை, ரணதுங்க குடும்பத்தினரை இரண்டாக்கியவதற்கும் ராஜபக்ச குடும்பம் பொறுப்புகூறவேண்டும்.  எனது குடும்பத்தில் அரசியல் ரீதியில் சிற்சில பிரச்சினைகள் இருந்தாலும் உறவு என்பது முழுமையாக நீங்கவில்லை என்பதனையும் கூறியாகவேண்டும். நாம் வளர்ச்சியடையவேண்டும். அதேபோல எம்மை எவரும் சந்தர்ப்பத்துக்காக பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். என்னை எவரும் சந்தர்ப்பத்துக்காக பயன்படுத்த முடியாது.  இது அரசியல் தலைவர்களுக்கும் தெரியும்.

நான் நல்லவர்களுடன் பயணிப்பேன். எனவே, கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை சிறந்ததெனில் நாளை அவருக்கும் ஒத்துழைப்பு வழங்குவேன். பதவிகளை எதிர்ப்பார்த்து அரசியல் நடத்துபவன் நான் அல்லன்.” – என்றார்.

Related Articles

Latest Articles