ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவது சிறந்த விடயமாகும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதால் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு (இன்று) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் தமிழ்த் தேசியத்தில் எம்முடன் இணைந்து செயற்படக் கூடியவறான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார். அவருடன் சிறப்பு விருந்தினராக அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி கணேசலிங்கமும் கலந்துகொள்ளவுள்ளார்.
எமது கட்சியின் மாநாட்டுக்கு அனைத்துத் தரப்பினரையும் வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.
எங்களுடைய கட்சி இதுவரை பல கஷ்டங்களை எதிர்கொண்டு, தற்போது நல்லதொரு நிலைக்கு வந்துள்ளது. எமது கட்சியைப் பதிவு செய்ய விடக் கூடாது என்று கூட பலர் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அது கூட எமக்குச் சில காலங்களுக்கு முன்னரே தெரியவந்துள்ளது.
எமது கட்சி இன்று பதிவு செய்யப்பட்ட பல இளைஞர்களைத் தன்னகத்தே கொண்ட கட்சியாகக் காணப்படுகின்றது.
நாங்கள் இதுவரையில் என்ன செய்தோம் எனக் கேட்கக் கூடும். பல நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் எனப் பல்வேறுபட்ட தரப்பினர்களுடன் எமது பிரச்சினைகள் தொடர்பில் பேசி இருக்கின்றோம். எமது கருத்துக்களை அவர்கள் உன்னிப்பாகச் செவிமடுத்து சிலதைச் செய்துள்ளார்கள்.
இன்று உலக நாடுகள் மத்தியில் இலங்கைக்கான ஆதரவு குறைந்துள்ளது. பல நாடுகள் இலங்கைக்கான தமது ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகியுள்ளனர்
தமிழர்களின் நிலங்களைத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு தொடர்பில் பல தரப்பிடமும் எடுத்துக் கூறி வெளிக்கொணர்ந்துள்ளோம்.
அதுமட்டுமின்றி எங்களுடைய பிரச்சினைகளைப் பற்றி சிங்களத்தில் பல விடயங்களைக் கூறி வருகின்றோம். சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து சிங்கள மொழியில் எடுத்துக் கூறியுள்ளோம். இன்னமும் கூறி வருகின்றோம்.
எமது கட்சி இளையோரின் கட்சியாகும். அப்ப நீங்கள் ஏன் தலைவாராக இருக்கின்றீர்கள் எனக் கேட்கலாம். குழந்தையைத் தாய் ஒருவர் பிரசவிப்பதற்கு முன்னர் அந்தக் குழந்தை ஆரோக்கியமானதாகப் பிறக்க வேண்டும் என்பதற்காகச் செவிலி தாய் ஒருவர் கூட இருந்து அந்தத் தாயைப் பார்த்துக்கொள்வார்.
அதேபோலவே இந்தக் கட்சியை நல்ல நிலையில் வளர்த்து, இளையோரிடம் கையளித்து விட்டு சம்பந்தன் போல் போய் சேர்ந்து விடுவேன்.” – என்றார்.










