உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
குறித்த வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு ஆளும் கட்சியும், எதிரணிகளும் நாடாளுமன்றத்துக்குள்ளும், அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் கடுமையாக போராடிவருகின்றன.
கடந்த வாரம், ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரான பிரதமரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
உள்ளாட்சிசபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதால் வேட்புமனுக்களை கையளித்த அரச ஊழியர்களைப் போன்று ஏனைய நபர்களும் அடுத்தக்கட்டம் நோக்கி நகர முடியாமல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக பிரதமர் முன்னிலையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன இதன்போது பதிலளித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (திருத்த) சட்டத்தின் கீழ், வேட்பாளர் ஒருவர் தனது தொகுதிகளில் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மக்களுக்கு உதவுதல் போன்றவற்றின் மூலம் தேர்தல் சட்டங்களை மீறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்புமனுவை இரத்து செய்ய, பிரதமர் தினேஷ் குணவர்தன அனுமதி பெற எதிர்பார்த்துள்ளதாகவும் தெரியவருகிறது.
ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பில் முடிவொன்று எடுக்கப்படலாம் என அறியமுடிகின்றது.