ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் நத்தார் பண்டிகை வாழ்த்துச் செய்தி…..

இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகும்.

சமூகத்தின் நல்வாழ்வைப் போன்று, பாவத்தின் இருளை அகற்றுவதே இயேசு கிறிஸ்து போதித்த உன்னதப் பெறுமானங்களாகும். சமாதானம், கருணை, இரக்கம் போன்ற வழிகாட்டல்களின் மூலம் தவறான புரிதலை நீக்கப்பெற்ற சுபீட்சமான வாழ்க்கை நெறிக்கு இந்தப் போதனைகள் வழிகாட்டுகின்றன.

மானிட சமூகம், ஒவ்வொருவர் மீதும் இரக்க குணத்துடனும் அன்புடனும் வாழ்தல் மற்றும் சமுதாயத்தில் அல்லலுரும் மக்களுக்கு ஆதரவளித்தல் மூலம் இறைவனின் அன்பை உண்மையாகவே ஒவ்வொருவரினதும் வாழ்க்கையில் கண்டுகொள்ள முடியும் என்பதை இயேசு கிறிஸ்து போதித்தார்.

சமூக ரீதியாக நத்தாருடன் ஒன்றிணைந்த கலாசாரம், ஒரு மகிழ்ச்சியான தருணமாகவும், நட்புணர்வின் வெளிப்பாடாகவும் விளங்குகின்றது. அதனால், நத்தார் கலாசார விழுமியங்கள், இன, மத பேதமின்றியும் வயது வேறுபாடின்றியும் அனைவரது உள்ளங்களையும் உற்சாகமூட்டுகின்றன.

நிலவுகின்ற உலகளாவிய கொவிட் 19 தொற்றுப்பரவல் காரணமாக இவ்வருட நத்தார் பண்டிகையை, சுகாதாரப் பரிந்துரைகளுக்கு ஏற்ப கொண்டாடவேண்டி ஏற்பட்டுள்ளது. இரண்டு வருட காலமாக, தனிப்பட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒரு நாடு என்ற வகையில் ஒவ்வொருவரினதும் மதங்களினால் பயிற்றுவிக்கப்பட்ட ஆன்மீகச் சிந்தனைகள் மற்றும் ஒழுக்கம் என்பன தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உறுதுணையாக அமைந்தன.

இவ்வருட நத்தார் பண்டிகையின் போதான இயேசு கிறிஸ்துவின் அன்பின் நற்செய்தி, இலங்கைவாழ் கிறிஸ்தவ சகோதரர்களான உங்களுக்கும் உலகளாவிய கிறிஸ்வத மக்களுக்கும் கிடைக்கட்டும். உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துகள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச்,

…….

அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை இப்பூவுலகில் விட்டுச்சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நத்தார் நினைவூட்டுகிறது.

இறைவனின் அன்பும், மனித கண்ணியமும் மனிதநேயத்தை அடிப்டையாகக் கொண்ட சமுதாயத்திற்கு நம்பகமான அடித்தளமாக அமைந்தது.

பெத்லஹேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்து, இவ்வுலகை யதார்த்தமாக நோக்குவதற்கு அவரது பிறப்பு முதலே முன்மாதிரியாக திகழ்ந்தார்.

நல்லுள்ளம் படைத்தவர்கள் அமைதியை பகிர்ந்துக் கொள்வார்கள். தம் மீது வெறுப்பு கொண்டவர்கள் மீதும் அன்பு காட்டுபவர்களாக திகழ்வார்கள். அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் பொருள் உணர்ந்து தமது வாழ்க்கையை உயிர்ப்பித்துக் கொள்வர்.

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கவும், இவ்வுலகில் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்காகவுமே இயேசு கிறிஸ்து தனது முழு வாழ்நாளையும் அர்ப்பணித்தார்.

அந்த வெளிப்பாட்டை சரியான முறையில் உணர்ந்து, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதன் மூலம் ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்க்கையும் ஒளிமயமாகும்.

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்த உலகை மீள புத்துயிர் பெறச் செய்வதுடன், நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்புகளுடன் நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது உங்களுடைய பொறுப்பாகும்.

‘நட்சத்திர ஒளியும், கிறிஸ்துவின் பிறப்பும், உலகை உயிர்ப்பிக்கும்’ எனும் தொனிப்பொருளில் அலங்கரிக்கப்படும் இம்முறை நத்தார் தினம் ஒட்டுமொத்த உலகவாழ் மற்றும் இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் மகிழ்ச்சியான நாளாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச

……

….

இயேசுபாலகனின் பிறப்பானது உலகவாழ் அனைத்து கிறிஸ்த்தவ மக்களால் குதூகலமாகக் கொண்டாடப்படும் இவ்வேளையில், இலங்கை மக்களாகிய நாமும் இதில் ஒன்றிணைந்து, அறியாமையினையும், அகந்தையினையும் அகற்றி மனித குலம் மேம்பாட்டடைய வாழ்த்துகின்றேன்.

-இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் –

……..

அன்பு, மனிதாபிமானம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் என மனித வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல ஒழுக்கங்களைக் கற்றுத் தந்த இயேசுபிரானின் பிறந்த நாளைக் கிறிஸ்மஸ் தினமாகக் கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.

-செந்தில் தொண்டமான் –

உப தலைவர் – இ.தொ.கா.

Related Articles

Latest Articles