” யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றுமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.” -என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளைத்தவிர ஏனையவை பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்யக்கூடிய வகையில் பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு,
” நான் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் எனக்கு அரச செலவில் வீடு தேவையில்லை. பாதுகாப்பும் வேண்டாம். இதனை எழுத்துமூலம் வழங்குவதற்கு நான் தயார்.
நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணையையே நிறைவேற்றிவருகின்றோம். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல.
கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் மாத்திரம் பராமரிக்கப்படும். கண்டியில் உள்ள மாளிகை கலாசார ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றது. கொழும்பில் உள்ள மாளிகையில் நான் வாழவில்லை. இராஜதந்திர சந்திப்புகளுக்கு அது அவசியம்.
நுவரெலியா, யாழ்ப்பாணம், உடவலலை உட்பட ஏனைய பகுதிகளில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அமைச்சர்களுக்குரிய வீடுகள் தற்போது மதிப்பிடப்பட்டுவருகின்றது.
அவ்வாறு சொத்து பெறுமதி மதிப்பிட்ட பிறகு, பொருளாதாரத்துக்கு பயன் அளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும். அதற்குரிய வழிமுறைகள் பற்றி ஆராய்ந்து யோசனைகளை முன்வைப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
யாழ். ஜனாதிபதி மாளிகையை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக்குமாறு (ஐடி யுனிவர்சிஸ்டி) யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கிடைக்கப்பெறும் யோசனைகள் தொடர்பில் ஆராயப்பட்டு, பொருளாரத்துக்கு பயனளிக்கும் வகையில் முடிவு எடுக்கப்படும்.
மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கு முகங்கொடுக்க முடியாதவர்களே அரசியல் பழிவாங்கல் கதைகளை கூறிவருகின்றனர்.” – என்றார்.
