ஜப்பானில் அடுத்த பயங்கரம் – பற்றி எரிந்த விமானம்! நடந்தது என்ன?

ஜப்பான் நாட்டில் மிக மோசமான விமான விபத்து அரங்கேறியுள்ள நிலையில், அந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த சில பகீர் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

இந்த 2024 ஆரம்பமே ஜப்பான் நாட்டிற்கு மோசமாக இருந்துள்ளது. முதலில் புத்தாண்டு தினத்தில் ஜப்பான் நாட்டில் மிக மோசமான நிலநடுக்கம் தாக்கியது.. தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தால் 48 பேர் உயிரிழந்தனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே ஜப்பான் நாட்டில் மற்றொரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.

பாதுகாப்பிற்குப் பெயர் போன ஜப்பான் நாட்டில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியுள்ளது. டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் தரையிறங்கும் போது ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் மொத்தம் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த விபத்து தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் விமானம் தீப்பற்றி எரிந்தவாறு சில கொஞ்ச தூரம் செல்கிறது. அதன் பிறகு விமானம் திடீரென வெடித்துச் சிதறுகிறது. இவை அனைத்தும் அதில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இந்த விமானத்தில் எட்டு குழந்தைகள் உட்பட 367 பயணிகளும் 12 பணியாளர்களும் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் சில நொடிகளில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே இந்த விபத்து குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த பயணிகள் விமானம் தரையிறங்கும் போது அங்கே இருந்த கடற்படைக்குச் சொந்தமான சிறு விமானத்தில் இது மோதியதாகத் தெரிகிறது. அதுவே இந்த விமான விபத்திற்குக் காரணமாக அமைந்துவிட்டது. இந்த பெரிய விமானம் மோதியதில் கடற்படை விமானம் முற்றிலுமாக உருக்குலைந்து போனது. அதில் மொத்தம் 6 பேர் இருந்த நிலையில், அதில் ஒருவர் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்டார். மற்ற 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிகிறது.

விபத்திற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், பயணிகள் விமானமும் கடற்படை விமானமும் மோதிக் கொண்டதே இதற்குக் காரணம் என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றனர். மத்திய ஜப்பான் பகுதியில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது.

அந்த பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவவே இந்த கடற்படை விமானம் தயாராக இருந்துள்ளது. அப்போது தான் இந்த கொடூர விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “பயணிகள் விமானம் கடற்படை விமானத்துடன் மோதியது போலத் தெரிகிறது.

ஆனால், இது குறித்துக் கூடுதல் தகவல்கள் தேவைப்படுகிறது. இந்த விபத்தில் இரண்டு விமானங்களுக்குத் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் உரிய விசாரணை நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்” என்றார். இது மனித தவறா அல்லது தொழில்நுட்ப தவறா என்பது குறித்தும் விசாரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles