தாய் குலத்தை இழிவு படுத்தும், வகையில், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆற்றிய உரையை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – என்று பதுளை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் கூட்டாக சுயமாக தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பதுளைப் பிராந்தியப் பணிமனையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, பிரதேச சபை உறுப்பினர்களான எஸ். கார்த்தீஸ்வரன், எம்.பி. லோகநாதன், டி. யோகராஜா ஆகியோர் உரையாற்றுகையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
பிரதேச சபை உறுப்பினர் எஸ். கார்த்தீஸ்வரன் பேசும்போது, ‘குட்டி ஆடு கொழுத்தாலும்,வலு வலுப்பு மாறாது என்ற பேச்சுவழக்கு முதுமொழிக்கமைய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆற்றிய உரையானது ஜீரணிக்க முடியாததொன்றாகும். அவர் ஆற்றிய உரை முழு தாய்க்குலத்தையே அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பெண்களை கௌரவப்படுத்தும் மகளிர் தினத்தை கொண்டாடிய அடுத்து வரும் மாத்தில் அப் பெண்களையே அவமானப்படுத்தும் வகையிலும், இழிவுப்படுத்தும் வகையிலும் எமது சமூகத்திற்கு விரும்பியும், விரும்பாமலும் ஏற்படுத்தப்பட்ட தலைவர் என்று தம்மைக் காட்டிக் கொண்டவர் செயற்பட்டிருக்கின்றார். இவ் உரைக்கு நாட்டின் முழு தாய்க்குலமும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியதொன்றாகும். இந்நாடே ஸ்தம்பிக்கும் வகையில் பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் உரையானது, ஏனைய சமூகங்களும், எமது சமூகப் பெண்களை குறைந்து மதிப்பிட வைத்துள்ளது. ஆகவே, ஜீவன் தொண்டமானின் இச் செயற்பாடுகளுக்கு அவர் மலையக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துடன் அடுத்து வரும் பாராளுமன்ற அமர்விலும் அவர் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும்’ என்றார்.
லுணுகலை பிரதேச சபை உறுப்பினர் எஸ். கனகசுந்தரி தமதுரையில், ‘ஜீவனுக்கு கிடைக்கப்பெற்ற அனுதாப வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள், மலையகப் பெண்களால் கிடைக்கப்பெற்ற வாக்குகளாகும். இந்நிலையில், அவர் எமது பெண்களுக்கு தகுந்த சன்மானத்தை வழங்கியுள்ளார். இப்புத்தாண்டில் அவர் எமக்கு வழங்கிய இச் சன்மானமே பெரிதாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் முயற்சியினால் கிடைக்கப்பெற்ற ஆயிரம் ரூபா தினச் சம்பள உயர்வில், ஜீவனுக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே, ஜீவன் ஆத்திரத்தினால் இப்படி பேசியிருக்கின்றார். அவரது இப் பேச்சை என்றுமே மறக்க மாட்டோம். அடுத்து வரும் தேர்தலில், எமது பெண்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள்.
அவர் தனக்கேற்பட்ட வேலைப்பளுவினால் அப்படி பேசிவிட்டேன் என்று ஜீவன் கூறியிருக்கின்றார். அவரது வேலைப்பளுக்கு, மலையகப் பெண்களை ‘பயிட்’டாக வேண்டும்’ என்றார்.
லுணுகலை பிரதேச சபை எதிர்க்கட்சித்த தலைவர் எம்.பி. லோகநாதன் தமதுரையில், ‘பொறுப்புமிக்கவர்களாக தம்மைக் காட்டிக்கொள்பவர்கள், பொறுப்புடன் நடந்து கொள்ளல் வேண்டும். சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது.
தமது மூதாதையர்கள் கட்டிக்காத்த, வரலாறு கூறும் மலையகத்தின் முக்கிய தொழிற்சங்கமொன்றை பிரதிநிதித்துவம் சய்யும் பொறுப்புமிக்கவர்கள் மகளீரை இழிவுப்படுத்தும் வகையில் உரையாற்றியிருக்கக் கூடாது. தமது வாயிலிருந்து வெளிக்கொணரப்படும் எந்தவொரு சொல்லும் நிதானித்துப் பேச வேண்டும்.
வார்த்தைகள் வெளிவந்த பின்னர் எதுவுமு; செய்ய முடியாது. நாம் எதையும் பேசலாம். மக்கள் அதனைக் கேட்க வேண்டுமென்று இருந்து வரும் நிலைப்பாடு மாற வேண்டும். மக்கள் புத்தி சாதூரியமாக இருக்கின்றனர். சொல்வதற்கெல்லாம் மக்கள் ‘ஆம்’ என்று கூறும் நிலை இன்று இல்லை’ என்றார்.
பசறை பிரதேச சபை உறுப்பினர் டி. யோகராஜா பேசுகையிர், ‘இராஜாங்க அமைச்சர் ஜீவன் ஆற்றிய உரை கண்டிக்கத்தக்கதாகும். இதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இம் மன்னிப்பை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே’ என்றார்.
எம். செல்வராஜா, பதுளை










