” பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்டத்தையும் கைப்பற்றும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் வேட்பாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டு மக்கள் அமோக ஆதரவை வழங்கினர். இதன்மூலம் நிலையானதொரு அரசாங்கம் உருவானது. எனவே, நாட்டு மக்கள் வழங்கிய ஆதரவை முழுமைப்படுத்தி முன்நோக்கி பயனிப்பதற்காக பாராளுமன்றத்திலும் எமக்கு பெரும்பான்மை அவசியம். சாதாரணப் பெரும்பான்மை இல்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மையே தேவைப்படுகின்றது. அது கிடைக்கும் என நம்புகின்றோம். எனவே, வெற்றியின் பங்காளர்களாகுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நுவரெலியா மாவட்டமென்பது பொருளாதாரத்தின் மையம். தேயிலை ஏற்றுமதிமூலம் சிறந்த வருமானத்தைப்பெறலாம் இம்மாவட்டத்திலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் புதிய அரசாங்கம் தீர்க்கும். நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகமொன்று அமையும் என்பதுடன், தொழிற்பயிற்சி நிறுவனமும் அமைக்கப்படும்.
ஜீவன் தொண்டமான் என்பவர் சிறந்த இளம் தலைவர். அவர் தனது தந்தையின் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துசெல்லவேண்டும். தொண்டமான் திட்டமிட்டிருந்ததைக்காட்டிலும் அதனை சிறப்பாக அதனை செய்யவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.” – என்றும் ஜீ.எஸ். பீரிஸ் கூறினார்.
க.கிசாந்தன்