ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு ஜெனிவா பறப்பதற்கு முன்னர் கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நடத்தவுள்ளார் என தெரியவருகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் தூதுவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என அறியமுடிகின்றது.
இதன்போது உள்ளக பொறிமுறையை வலுப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நகர்வுகள் பற்றி அவர் விளக்கமளிக்கவுள்ளார்.
அத்துடன், உள்ளக பொறிமுறையை வலுப்படுத்துவதற்காக அங்கத்துவ நாடுகளின் ஒத்துழைப்பை அவர் கோரவுள்ளதுடன், ஜெனிவாவில் இது குறித்து ஆதரவு வழங்குமாறும் கோரவுள்ளார் என தெரியவருகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய ஏற்பாடு, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம், இழப்பீட்டு பணியகம் என்பவற்றை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றியும் தெளிவுபடுத்தப்படவுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இதன்போது இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளது.
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் உள்ளக பொறிமுறையை ஏற்கும் நிலைப்பாட்டிலும், வெளியக பொறிமுறையை நிராகரிக்கும் தீர்மானத்திலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது.