” போராட்டங்கள் மற்றும் அறகலய ஊடாக ஜே.வி.பியினர்தான் நாட்டை நாசமாக்கினர். 76 வருடங்களாக அரசுகளை ஆளவிடவில்லை. இன்று ஆட்சிக்கு வந்ததும் ஆளத்தெரியவில்லை.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நீதிமன்ற வளாகத்தில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அம்பாந்தோட்டை துறைமுகத்தை பாதுகாப்பதற்காக அன்று ஜே.வி.பியுடன் இணைந்துதான் போராடினோம். அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டனர். நாம் நீதிமன்றத்தக்கு வந்துகொண்டிருக்கின்றோம். குறைந்தபட்சம் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
அரச வளங்களை நாம் துஷ்பிரயோகம் செய்யவில்லை. அவற்றை பாதுகாத்துள்ளோம். எமக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில், குற்றமற்றவர்கள் என்பதை நீதிமன்றம் ஊடாக நிரூபிப்போம். ஏனெனில் இந்நாட்டின் நீதித்துறைமீதும், அதன் சுயாதீனத்தன்மை தொடர்பிலும் எமக்கு முழு நம்பிக்கை உள்ளது.
76 வருடங்களாக அறகலய மற்றும் தீ வைப்புமூலம் ஜே.வி.பியே நாட்டை நாசமாக்கியது. தற்போது அவர்களுக்கு ஆளத்தெரியவில்லை. எனவே, அனுபவம் மிக்கவர்களிடம் ஆலோசனை பெறவேண்டும்.” – என்றார்.