ஜே.வி.பி. கட்சியினரே தமக்கு ஆயுதம் வழங்கினார்கள் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு நேற்று வியாழக் கிழமை விஜயம் செய்த ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மட்டக்களப்பில் பிள்ளையான் மக்களை அச்சுறுத்துகின்றார் என்று தெரிவித்தமை தொடர்பாக இன்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியமைக்குப் பதிலளிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
“அநுரகுமார திஸாநாயகக்கவின் ஜே.வி.பி. கட்சியினர்தான் முதலில் எங்களுக்கு ஆயுதம் வழங்கினார்கள். பின்பு எங்களிடம் மக்களைச் சுடுவதற்கென ஆயுதம் கேட்டார்கள். நான் அவர்களுக்கு ஆயுதம் கொடுக்கவில்லை. இவையெல்லாம் அந்தக் கட்சியில் வேறு ஒருவர் தலைவராக இருந்தபோது இடம்பெற்றது.
மக்களை நான் அச்சுறுத்துவதாகச் சொன்னால் மட்டக்களப்பில் அதிக வாக்குகளைப் பெற்றவர் நான். ஜனநாய கத்தைப் பற்றி கதைப்பவர்கள் பொறுப்பாக யோசித்துக் கதைக்க வேண்டும். நாட்டைத் தீக்குழிக்குள் தள்ளி பல்கலைக்கழக மாணவர்களை வன் முறைக்குத் தூண்டும் ஒரு கட்சி, நாட்டை அழிக்கச் செய்த ஒரு கட்சி எமது மண்ணில் இவ்வாறு கதைப்பது வேத னைக்குரிய விடயம்.” – என்றார்.










