“1 983 இல் ஜே.வி.பியினருக்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சூழ்ச்சி நாடகத்தை மீண்டும் அரங்கேற்ற முற்பட வேண்டாம். அத்தகைய முயற்சி கைகூடாது என்பதை என்பதை புரிந்துகொள்ளுங்கள்
எங்களிடம் துணை இராணுக் குழுக்கள் இல்லை. கட்சி தோழர்களே எனக்கு பாதுகாப்பை வழங்குகின்றனர். எனவே, எந்தவொரு விசாரணைக்கும் முகங்கொடுக்க தயார்.”
இவ்வாறு நாடாளுமன்றத்தில் நேற்று (06) அறிவிப்பு விடுத்தார் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தையும் நேற்று முன்தினம் (05.04.2022) போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்துக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
போராட்டத்துக்கு மத்தியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்த ஜே.வி.பியின் அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தையும் போராட்டக்காரர்கள் வழிமறித்தனர். அவருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் “ அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்துக்குள் தலைக்கவசம் அணிந்த ஒருவர் இருந்தார், அவர் யார், எங்கு இறக்கினார் , இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.” – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்றைய (06) சபை அமர்வின்போது சபாநாயகரிடம், கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், ஜே.வி.பியின் கடந்த காலம் தொடர்பிலும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
கொள்ளையர்கள், கொலைகாரர்கள் என்ற தொனியிலும் விமர்சனங்களை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தொடுத்தார்.
இதற்கு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க விரிவான பதிலை வழங்கினார்.
“ படுகொலைக்கு பொறுப்புக் கூறவேண்டியவர், உயர் கதிரையில் அமர்ந்திருக்கையில், நாம் எப்படி வீதியில் சுதந்திரமாக நடமாடமுடியும்? எமக்கான பாதுகாப்பை சுயமாக ஏற்படுத்திக்கொண்டுள்ளோம்.
நான் வாகனத்தில் பயணக்கும்போது, எமது கட்சி தோழர்கள் பலர் சூழ இருந்து பாதுகாப்பை வழங்கிவருகின்றார்கள்.
நாம் முட்டாள்தனமாக செயற்படுவதில்லை. உயிரை பலிகொடுக்க போவதும் இல்லை. முன்னாயத்தமாக இருப்பதால்தான் முட்டை வீச்சு தாக்குதல் நடத்த வந்தவர்களை மடக்கிபிடிக்ககூடியதாக இருந்தது. நுகேகொடை கூட்டத்துக்கு தாக்குதல் நடத்த வந்தவர்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தக்கூடியதாக இருந்தது.
நான் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர், தோழர் நான் வருகின்றேன் என தெரியப்படுத்துவேன், உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். நாளையும் நான் இப்படிதான் செயற்படுவேன்.
வாகனத்தில் பயணிக்கும்போது கல் வீச்சு அல்லது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தி, விபத்தை ஏற்படுத்தி எமது உயிரை பலியெடுக்க முடியும் என நினைக்கின்றீர்களா? அவ்வளவு எளிதில் எம்மை வீழ்த்திவிடமுடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
எமது நாட்டில் பாரிய குற்றங்கள் நடக்கும்போது பாதுகாப்பு செயலாளராக இருந்தவர் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்றார். எனவே, எமது பாதுகாப்பு தொடர்பில் நாம் விழிப்பாகவே இருக்கின்றோம்.
எனது வாகனத்துக்கு மோட்டார் சைக்கிள் பாதுகாப்பும் வழங்கப்படும். அவ்வாறு பாதுகாப்பு வழங்கும் தோழர் ஒருவர்தான் ‘ஹெல்மட்டுடன்’ வாகனத்தில் ஏறினார். அதில் உள்ள பிரச்சினை என்ன?
அவர் யாரென தெரிய வேண்டுமா, விசாரணை நடத்துங்கள், முன்னிலைப்படுத்தி தகவல் வழங்குகின்றோம். அவர்கள் துணை இராணுவக்குழுக்கள் அல்ல, அடையாளம் காணமுடியாத நபர்களும் அல்லர்.
இவர்களின் சூழ்ச்சி புரிகின்றது. 1983 இலும் இப்படிதான் நடந்தது. கறுப்பு ஜுலை நிர்மாணிக்கப்பட்டது. அதற்கு எமக்கு கட்சிக்கு எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. ஆனால் கட்சி தடைசெய்யப்பட்டது.
அன்று செய்ததை இன்று செய்ய முற்படவேண்டாம், அந்த யுகம் முடிந்துவிட்டது. ஹிட்லர், முகாபி, கடாபி யுகங்கள் முடிந்துவிட்டன என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
83 இல் அரங்கேற்றிய நாடகங்களை அதே பாணியில் மீள அரங்கேற்ற முற்பட்டால் அது கைகூடாது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
எந்தவொரு விசாரணைக்கும் முகங்கொடுப்பதற்கு நாம் தயார். மிரிஹான சம்பவம் தொடர்பில் நடந்த கூட்டத்துக்கு அவன்காட் நிறுவனத்தின் பிரதானி எப்படி செல்ல முடியும்? பாதுகாப்பு தரப்பினர்கூடிய கூட்டத்துக்கு அவர் செல்லமுடியுமா?” -என்றும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
1965 இல் தோழர் ரோஹன ரோஹன விஜேவீர தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
ஶ்ரீமாவோ ஆட்சிகாலத்தழல் தோழர் ரோஹன விஜயவீர கைது செய்யப்பட்டனர். கட்சியின் செயற்பாடுகள் ஸ்தம்பிக்க வைக்கப்பட்டன.
77 தேர்தலுக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். 82 ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. போட்டியிட்டது.
1983 கலவரத்தின் பின்னர் ஜே.வி.பி. தடைசெய்யப்பட்டது. பின்னர் தடை நீக்கப்பட்டது.
ஆர்.சனத்