ஞானசார தேரர் எனது நண்பர்: அவரை எதிரணி அரசியலுக்காக பயன்படுத்துகிறது: இது அவருக்கும் தெரியும்

“சட்டத்தின் பிரகாரம் தனிநபர்களுக்குத் தண்டனை வழங்கலாம். ஆனால் துறவற ஆடைக்குத் தண்டனை வழங்கப்படக் கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்” – என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஞானசார தேரர் எனது நண்பர், ஆனால் நாட்டில் சட்டம் உள்ளது. அச்சட்டம் எம்மால் உருவாக்கப்பட்டதும் அல்ல; எம்மால் ஞானசார தேரருக்கு இந்த நிலை ஏற்படவும் இல்லை.

ஞானசார தேரர் ஒரு நல்ல மனிதர். அவரை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்திக் கொள்கின்றனர்; அது அவருக்கும் தெரியும். இன்றும் அவரை அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றனர்.

ஏனைய 63 பிக்குகள் பற்றி யாரும் பேசுவதில்லை. ஏனெனில் அவர்களை அரசியலுக்காகப் பயன்படுத்த முடியாது. எனவே, ஞானசார தேரரை எதிரணியினர் அரசியலுக்காகவே பயன்படுத்துகின்றனர்.

துறவற ஆடைக்குத் தண்டனை வழங்கப்படுவதை நான் உடன்படவில்லை. வெள்ளையர்களின் காலத்திலும் காவி உடைக்குத் தண்டனை வழங்கப்பட்டது; துறவற ஆடையுடன் பிக்குகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நான் இதை விரும்பவில்லை.

நபர் தவறையிழைப்பதால் காவி உடை குற்றமிழைக்கவில்லை. எனவே, சட்டத்தின் பிரகாரம் தனிநபருக்குத் தண்டனை வழங்கலாம். துறவற ஆடைக்குத் தண்டனை வழங்கப்படுவதை என்னால் ஏற்க முடியாது. இது எனது தனிப்பட்ட கருத்தாகும்” – என்றார்.

Related Articles

Latest Articles