டயகமவில் ‘வட்டி’ மாபியா! சினிமாப்பாணியில் பெண் அராஜகம்!!

நுவரெலியா மாவட்டத்தில் டயகம பகுதியில் மேற்கு 5ஆம் பிரிவிலுள்ள பெண்ணொருவர் வட்டிக்கு பணம் கொடுத்து மோசடியான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் எனவும், அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வழங்கும் பணத்துக்கு அதிக வட்டி அறவிடப்படுவதாகவும், இது தொடர்பில் வினவினால் அடியாட்களை வைத்து அப்பெண் தாக்குவதாகவும் அவருக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சில காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடும் – அடியாட்களையும் வைத்துக்கொண்டும் சினிமாப்பாணியில் வட்டி வர்த்தகம் நடத்தும் இப்பெண் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தினமும் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர். அவர்களின் சார்பில் எமக்கு கீழ்வரும் பதிவு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதனை உங்கள் பார்வைக்கு முன்வைக்கின்றோம்.

தனிநபரகளின் செயல்கள் சமூகத்துக்கு அல்லது மக்களுக்கு பாதிப்பெனில் அவற்றை செய்தியாக வெளியிடுவது தவறில்லை என்ற அடிப்படையில் பதிவிடுகின்றோம்.

“கடன் வாங்கிறது நம்ம அம்மாமார் பழக்கம்தான். அதை திருப்பிக் கொடுக்கத்தான் வேணும். ஆனா இங்கு பெரிய அநியாயம் நடக்குது. ஒரு பெண் ரொம்ப அடாவடி நடத்திக்கிட்டு இருக்காங்க.

வட்டிக்கு காசு எடுக்கும்போது வெத்து காகிதத்தில கையெழுத்து வாங்கிறது, அப்படி வெத்து காகிதத்தில கையெழுத்து போட முடியாதுனு சொன்னா, தொகைய எழுத்தில எழுதாமல் இலக்கத்தில மட்டும் எழுதிக்கிறது.

அப்புறம் வட்டி கொடுக்க கொஞ்சம் லேட் ஆகிச்சினா அந்த இலக்கத்தில தொகை கூட்டி போடுறதுனு அடாவடி பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க. உதாரணமாக 40,000 வாங்கியிருந்து, வட்டிக்கொடுக்க லேட் ஆகிட்டா, அதை 4 லட்சமாக மாத்தி, மிரட்டுறது.

பொலிஸ் நிலையத்தில அந்த பெண்மீது ஏகப்பட்ட முறைப்பாடு இருக்கு. ஆனால் பொலிஸ் பொறுப்பதிகாரி பல தடவை கண்டிச்சி இருக்கிறாரு. இப்போது பொலிஸ் நிலையத்தில இரண்டாவது மூனாவது உள்ள பொலிஸ் அதிகாரிகளை கைக்குள்ள போட்டுக்கிட்டு, பொலிஸ் நிலையத்தில யாராவது முறைப்பாடு செய்யப்போனா அவங்களுக்கு எதிராக ரொம்ப அடாவடி பண்ணுறது. இப்படி ரொம்ப அடாவடி பண்ணிக்கிட்டு இருக்காங்க.

அத்துடன், தன்னிடம் பணம் பெற்று திரும்பி செலுத்த தாமதிக்கும் பெண்களை தரக்குறைவாக பேசுவதுடன், ஆண்களைக்கூட ஆள்வைத்து மிரட்டும் அளவுக்கு குறித்த பெண் நடந்துகொள்வதாக கூறப்படுகிறது.

சினிமாவில பண்ணுற மாதிரியே அந்த பெண் பண்ணிக்கிட்டு இருக்கு. ஒரு தம்பதிக்கு ரொம்ப நாளா குழந்தை இல்லை. அவங்க ஒரு பிள்ளைய எடுத்து வளர்க்கிறாங்க. அதில் அந்த பெண் கொழும்பில் வேலை செய்கிறார்.

அந்தப் பிள்ளை வீட்டில் இருக்கும்போது, உங்க உண்மையான அம்மா, அப்பா இவங்க இல்லை. உங்க அம்மா, அப்பா வேற என்று அந்த பிள்ளைக்கிட்ட சொல்லியிருக்கிறாங்க. தங்கட அம்மா, அப்பா என்டு நினைச்சு வாழ்த்துக்கிட்டு இந்த அந்தப் பிள்ளை இப்போ ரொம்ப மனசு உடைஞ்சு போய் இருக்கு. இதை கேட்கப்போன அப்பாவை, ரொம்ப கெட்ட வார்த்தையால திட்டி, மிளகாய் தண்ணிய ஊத்தி, இதை தனது பிள்ளைக்கிட்ட கொடுத்து வீடியோ எடுத்து, பயமுறுத்திறாங்க. பொலிசில முறையிட்டா, தன்னுடைய பிள்ளைய மானபங்கப்படுத்த முயற்சித்ததா சொல்லுவேனு மிரட்டுராங்க.

தமது பெண்கள் குடும்ப பொருளாதார சுமையினால் அதனை சமாளிக்க கடன் வாங்கி இவ்வாறு சிக்கிக் கொள்ளும் பல சந்தர்ப்பங்கள் அமைகின்றன. எனினும், அவற்றை கையாள்வதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகிறது. குறிப்பாக கடன் வாங்குபவரும், கொடுப்பவரும்கூட இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, ஒரு ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அத்துடன், இவ்வாறு பணத்திற்காக மனிதர்களைக் கீழ்த்தரமாக நடத்தும், பேசும் நபர்களுக்கு எதிராகவும் மக்கள் முறைப்பாடுகளை செய்ய வேண்டும்.
டயகம அல்லது அண்டிய பிரதேசங்களில் இருக்கும் சட்டம் படித்தவர்கள் அல்லது மனித உரிமை, சமூக செயற்பாட்டாளர்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும்.

அல்லது தொண்டு நிறுவனங்களின் இலவச சட்ட ஆலோசனைப் பெற்று இவ்வாறான சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும். இந்தப் பதிவைப் பார்க்கும் யாராவது ஒருவர் இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிகாட்டல்களை வழங்க முன்வர வேண்டும்.” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பு : (குறித்த பெண் நடந்துகொள்ளும் விதம், வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளிட்ட பல வீடியோக்கள் வந்துள்ள போதிலும், நாகரீகம் கருதி அவற்றை நாம் வெளியிடவில்லை)

Related Articles

Latest Articles