நோர்வூட் பிரதேச நிர்வாக எல்லைக்கு உட்பட்ட டிக்கோயா 319 கிராம சேவகர் பிரிவில் உள்ள சுமார் 1500 பேருக்கு இதுவரை முதலாம், இரண்டாம் கொவிட் – 19 தடுப்பூசிகள் வழங்கப்படாதுள்ளதாக நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் கே. குழந்தைவேல் ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட டிக்கோயா தோட்டம், தரவளை மேற்பிரிவு, தரவளை கீழ்ப்பிரிவு மற்றும் கொலனி ஆகிய இடங்களைச் சேர்ந்த சுமார் 1500 பேர் எந்த விதமான தடுப்பூசிகளையும் இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கின்றார்கள்.
அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட இந்த கிராம சேவகர் பிரிவு மாத்திரம் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது வேதனைக்கு உரிய விடயமாகும்.இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் தோட்டத் தொழிலாளர்கள் ஆவார்கள். அவர்கள் தொடர்ந்தும் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
தமது அத்தியாவசித் தேவைகளுக்காக அட்டன், டிக்கோயா, நோர்வூட் நகரங்களுக்கு செல்ல வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். அடுத்த மாதத்திலிருந்து மக்கள் வேறு இடங்களுக்கு பயணிக்கும் போது தடுப்பூசி ஏற்றிக் கொண்டமைக்கான உறுதிப் படுத்தும் அட்டையை தம்மோடு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படவுள்ளது.
மேலும், இந்த மாத இறுதிக்கும் சகலருக்கும் முதலாம், இரண்டாம் டோஸ் தடுப்போசிகள் ஏற்றப்பட வேண்டும் என்று ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இந்த நிலையில் தோட்டத் தொழிற் தோயில் ஈடுபட்டு தேயிலைப் பயிர்ச் செய்கையைக் காப்பாற்றி வரும் தோட்டத் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருப்பது கண்டிக்கத் தக்கதாகும். அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து தம்மைக் காப்பறிக் கொள்ள தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
எனவே, மேற்படி கிராம சேவகர் பிரிவில் உள்ள சகலருக்கும் தடுப்பூசி ஏற்றுவதில் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு நுவரெலியா மாவட்ட பிராந்திய வைத்திய பணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, இ.தொ.கா. பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம். ராமேஸ்வரன் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.










