ரிஷாட் பதியுதீனை சட்டத்தின் பிடிக்குள் இருந்து பாதுகாப்பதற்கோ அல்லது அரசியல் ரீதியில் அவரை பலிகடாவாக்குவதற்கோ எமக்கு எவ்வித தேவையும் கிடையாது. நீதிக்காகவே நாம் போராடிவருகின்றோம். எனவே, கொள்கை மறந்து – தாவல் அரசியல் நடத்தும் டிலான் பெரேரா போன்றவர்களுக்கு நீதிக்கான எமது குரல் நீலிக்கண்ணீராக தெரிவது குறித்து வியப்படைய வேண்டியதில்லை.
ஏனெனில் அவர்களின் அரசியல் ‘டிசைன்’ அப்படி அமைந்துள்ளது – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
” பாராளுமன்றத்தில் ரிஷாட் பதியுதீனுக்காக முஜிபூர் ரஹ்மான் எம்.பி. உரையாற்றும்போது மனோ கணேசன், திகாம்பரம், வேலுகுமார் ஆகியோர் கைதட்டி உற்சாகப்படுத்தினர். மறுபுறத்தில் தமிழ் ஊடகங்களில் பிரச்சாரம் தேடுவதற்கு நீதி கோருகின்றனர்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது டிலான் பெரேரா கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வேலுகுமார் எம்.பியால் கண்டியில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,
” டயகம சிறுமி சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் எமக்கு அறியக்கிடைத்ததும், மறுநொடி முதலே அது தொடர்பில் கவனம் செலுத்திவருகின்றோம். சிறுமியின் குடும்பம், ரிஷாட் பதியுதீனின் குடும்பம், பொலிஸார் என சகல தரப்புகளையும் தொடர்புகொண்டு கதைத்து, தகவல்களைப் பெற்றுள்ளோம். விசாரணை நம்பகரமான முறையில் துரிதமாக இடம்பெற வேண்டும், இதனுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான அனைத்துவிதமான அழுத்தங்களையும் பிரயோகித்துவருகின்றோம். இப்பிரச்சினையை மனித நேயத்துடன் அணுகுவதுடன் தேவையான நேரத்தில் அரசியல் ரீதியிலான அழுத்தங்களையும் பிரயோகித்துவருகின்றோம்.
எதிலும் – எப்படியும் அரசியல் நடத்தி, அரசியல் இலாபம் தேடிவிட வேண்டும் என்ற குறுகிய கொள்கையை முன்னிலைப்படுத்தி அரசியல் நடத்திவரும் டிலான் பெரேரா போன்றவர்களுக்கு இது புரியாது. அவ்வாறு புரிந்தாலும் அது தொடர்பில் போலியான தகவலையே பரப்புவார்கள். ஏனெனில் அவர்களின் அரசியல் ‘ஸ்டைல்’ அதுதான். அங்கும், இங்குமாக தாவி தஞ்ச அரசியல் நடத்துபவர்களுக்கு நீதிக்கான குரல்கூட வேறு விதத்தில்தான் விளங்கும்.
ரிஷாட் பதியுதீனை பாதுகாக்கும் நோக்கில் முஜிபூர் ரஹ்மான் உரையாற்றவில்லை. பொலிஸ், சட்டகட்டமைப்பு என சர்வ பலமும் ஆளுங்கட்சி வசம்தான் உள்ளது. எனவே, உண்மை கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்தினார். இதைத்தான் நாமும் சொல்கின்றோம். எனவே, ரிஷாட் பதியுதீனை பாதுகாப்பதற்கோ அல்லது பழிகடாவாக்குவதற்கான தேவையோ எமக்கு கிடையாது.
ஆனால் டிலான் பெரேரா போன்றவர்கள்தான் இந்த விடயத்தை பயன்படுத்தி எதிரணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்படியான கருத்துகளை வெளியிட்டு அரசியல் நடத்துகின்றனர். பதுளை மாவட்ட மக்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். நரிகள் ஊளையிடுவதால், நாய்கள் குறைப்பதால் நாம் குழப்பமடையமாட்டோம். நீதிக்கான எமது குரல் ஓங்கி ஒலிக்கும்.” என்றார்.