தவழும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டு அதற்கு ஒரு உந்து சக்தி கொடுத்தால்தான் அக்குழந்தையால் எழுந்து நின்று – இலகுவில் நடை பழக முடிகின்றது. இதுபோல மனித வாழ்வில் நாம் ஒவ்வொரு பருவத்தில் இருந்து அடுத்தக்கட்டம் நோக்கி செல்வதற்கு ஒரு உந்து சக்தி இருந்தால் அது பேருதவியாகவும், பெரும் பலமாகவும் அமையும். இது மனித வாழ்வுத்தன்மை. இலங்கை, இந்திய உறவுக்கும் இந்த கோட்பாடு ஏதோவொரு விதத்தில் பொருந்துகின்றது. அதாவது இலங்கை முன்னேற வேண்டுமெனில் அதற்கு இந்தியாவுடனான நெருங்கிய தொடர்புகள் அவசியம் என்பதே துறைசார் நிபுணர்களின் கருத்தாகும். இன்னுமொரு விதத்தில் கூறுவதாயின் இலங்கை முன்னேறி வீறுநடைபோட வேண்டுமெனில் அதற்கு இந்தியாவின் உந்து சக்தி அவசியமாகும்.
இதனை இலங்கையும் நன்கு உணர்ந்தே வைத்துள்ளது. அதனால்தான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் என முக்கிய மூன்று பதவிகளை வகிப்பவர்கள், தாம் பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா சென்றுவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமது நாட்டுக்கு இந்தியாவின் அன்பும், அரவணைப்பும், ஆதரவும் என்றும் தேவை என்ற செய்தியையே இதன்மூலம் அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
இலங்கை சுதந்திரம் அடையும்போது ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்த படியாக சிறந்த பொருளாதாரத்தைக்கொண்டிருந்தது. ஆனால் இலங்கையில் ஏற்பட்ட கிளர்ச்சிகள், போர், அரசியல் முரண்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் முன்னேற முடியாமல், பின்நோக்கி நகர வேண்டிய நிலை ஏற்பட்டது. மூடிய பொருளாதாரக் கொள்கையில் இருந்து 1977 இல் திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு சென்ற பின்னர்கூட நிலையானதொரு தேசிய வேலைத்திட்டம் இருக்கவில்லை. ஆட்சியைக் கைப்பற்றும் கட்சிகள் தமது தேவைக்கேற்ப கொள்கைகளை மாற்றிக்கொண்டன. அதன்விளைவாகவே இறுதியில் ‘வங்குரோத்து’ நிலையை அடைய வேண்டியேற்பட்டது.
‘வங்குரோத்து’ நிலையில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஒரு உந்து சக்தி தேவைப்பட்டது. அதனை இந்தியாவே முதலில் வழங்கியது. சர்வதேச நிறுவனங்கள் நிதி தரப்பட்டியலில் இலங்கையை பின்நிலைப்படுத்தின. உலக நாடுகள் பின்வாங்கின. ஆனால் இந்தியாதான் கோடிகளை வாரி வழங்கியது. எரிபொருள், மருந்து பொருட்களைக்கூட வழங்கியது. இதனை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தாலும், இந்த நன்றியை என்றும் மறக்க முடியாது என்பதால்தான் மீளவும் நினைவூட்டுகின்றோம்.
இந்தியாவின் நட்பு, தொடர்பு இல்லாவிட்டால் முன்னோக்கி செல்ல முடியாது என்பது ஆசியாவின் சிறந்த தலைவர்களுள் ஒருவரான இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியும். அதனால்தான் இந்தியா எமக்கு ‘ஒட்சீசன்’ வழங்கியது என ஒற்றை வசனம்மூலம் ஆழமானதொரு கருத்தை முன்வைத்தார். மனிதன் உயிர்வாழ் ‘ஒட்சீசன்’ மிக முக்கியம். இலங்கையின் இருப்புக்கும் இந்தியா முக்கியம் என்பதையே அந்த ஒற்றை சொல்லாடல்மூலம் ரணில் உணர்ந்தினார்.
இந்திய உதவிகளால் மீண்டெழுந்த இலங்கை, அடுத்ததாக சர்வதேச நாணய நிதியத்தை நாடியது. அங்கு முதல் ஆளாக இலங்கைக்கு பிணை வைத்ததே இந்தியாதான். அதன்பின்னரே பரிஸ் கிளப், அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளும் ஒப்புதல் வழங்கின. குறிப்பாக இந்தியா முன்வந்ததால்தான் ஜப்பான், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கின. சிலவேளை இந்தியா பின்வாங்கி இருந்தால் ஐஎம்எப் கடன் இன்னும் இழுபறி நிலையிலேயே இருந்திருக்கும்.
அந்த கடன் கிடைத்ததால் இலங்கையில் வரிசை யுகம் முடிவுக்கு வந்தது. கடன் மறுசீரமைப்பு திட்டம் வெற்றி பெற்றதால் ரூபா வலுவடைந்துவருகின்றது. பணவீக்கம் குறைவடைந்துள்ளது. டிசம்பர் மாதமளவில் பணவீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது. நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு நான்கு பெண்கள் காரணம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார். அதில் ஒருவர்தான் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆக இலங்கைக்கு இந்திய உதவி என்றும் தேவை என்பதற்கு இது மற்றுமொரு சான்று.
உலகளவில் இந்தியா இன்று வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நிலையில் ஜி – 7 உள்ளிட்ட முக்கிய மாநாடுகளுக்கு இந்தியா அழைக்கப்படுகின்றது. ஜப்பானில் கடந்த மாதம் நடைபெற்ற ஜி – 7 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். அங்கு குவாட் மாநாடும் நடைபெற்றது. கொழும்பு, டில்லி உறவு சிறப்பாக இருப்பதால் ஜி – 7 நாடுகள் மற்றும் குவாட் நாடுகள் என்பன இந்தியாவுடன் கடைபிடிக்கும் அதே அணுகுமுறைகளைதான் இலங்கை விவகாரத்திலும் பின்பற்றும். தெற்காசியாவின் வல்லரசு இலங்கைக்கு பின்னால் நிற்பதால், பூகோள அரசியல் பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதில் ஒன்றுக்கு ஆயிரம் தடவைகள் வல்லரசுகள் சிந்தித்து வருகின்றன. ஆசியாவை பிளவுபடுத்த இடமளிக்கபோவதில்லை என்றதொரு அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் விடுத்தார். இந்தியா தம்முடன் நிற்கின்றது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கும் என இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, இந்தியாவின் வளர்ச்சி இலங்கைக்கு எல்லா விதத்திலும் அனுகூலமாக அமையும்.