இந்திய விஜயத்தின் பின்னர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டமிட்டுள்ளார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதியின் இந்திய பயணத்துக்கான நாள் விபரம் மற்றும் சீன தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
” டிசம்பர் மூன்றாவது வாரத்தில் ஜனாதிபதி இந்தியா செல்லவுள்ளார். இன்னும் உரிய திகதி நிர்ணயிக்கப்படவில்லை. அதேபோல சீனாவில் இருந்தும் ஜனாதிபதிக்கு அழைப்பு வந்துள்ளது. சீனத் தூதுவர் அந்த அழைப்பை வழங்கியுள்ளார். இந்திய விஜயத்தின் பின்னர் சீனா செல்வது தொடர்பில் ஆராயப்படுகின்றது.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
