நாட்டின் அனைத்து பகுதிகளிலுமிருந்து இதுவரை 85,636 டெங்கு நோயளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் நாட்டில் 50 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தால் அதிகரித்துள்ளதாகவும் அந்த பிரிவின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் நாட்டில் 72, 903 டெங்கு நோயாளர்களே பதிவாகியிருந்த நிலையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அந்த எண்ணிக்கை 85,636 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் வெகு வேகமாக அதிகரித்து வருவதாக அந்த மாகாணத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 11 மாத குழந்தையொன்று டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் உலக அளவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சு, டெங்கு நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்யுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுவரை 85,636 நோயாளர்கள் பதிவு; 50 பேர் பலி – சுகாதார அமைச்சு தெரிவிப்பு