பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் டொப்ளர் வானிலை ரேடார் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக புத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இத்திட்டம் இலங்கையின் வானிலை முன்னறிவிப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை வழங்கும் திறன்களை குறிப்பிடத்தக்க வகையில் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை, வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. ஏ.எல்.கே. விஜேமான்ன வரவேற்றதுடன், தள ஆய்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து அவருக்கு விளக்கமளித்தார்.
இதன்போது, திட்டப் பொறியியலாளர்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிர்மாணப் பணிகள், பாதுகாப்புச் செயலாளரின் முந்தைய விஜயத்தைத் தொடர்ந்து எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் திட்டத்தின் எதிர்கால நடைமுறைப்படுத்தல் கால அட்டவணை குறித்து விரிவான விளக்கத்தை வழங்கினர்.
திட்ட கால அட்டவணையின்படி, ரேடார் கட்டமைப்பை நிறுவும் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முழுத் திட்டமும் அடுத்த ஆண்டு ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்குள் திட்டத்தை நிறைவு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இதன் மூலம் நாட்டின் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கும் தயார்நிலையை மேலும் மேம்படுத்துவதுடன், வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்தன்மையை அதிகரித்து, தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு எதிரான நாட்டின் தாங்குதிறனை வலுப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
