2025 ஒக்டோபர் 01 ஆம் திகதிய 2456/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பணிப்புரை இலக்கம் 95 இன் படி, பொருட்களை விற்பனை செய்யும் போது நுகர்வோர் கொள்வனவு செய்த பொருட்களை எடுத்துச் செல்வதற்காக வழங்கப்படும் Low-Density Polyethylene (LDPE) அல்லது Linear Low-Density Polyethylene (LLDPE) மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட, பொதுவாக “சிலி சிலி” பைகள் என அழைக்கப்படும் கைப்பிடிகளைக் கொண்ட பைகளை வர்த்தகர்கள் இலவசமாக வழங்க முடியாது.
இந்தப் பணிப்புரை 2025 நவம்பர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது.
அத்தகைய பை வழங்கப்படுமாயின், அதற்கான விலை அறவிடப்பட வேண்டும். அந்த விலை வர்த்தக நிலையத்தில் தெளிவாகத் தெரியுமாறு காட்சிப்படுத்தப்பட வேண்டும். மேலும், பைக்காக அறவிடப்பட்ட தொகை நுகர்வோருக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட வேண்டும்.
📢 வர்த்தகர்களுக்கு: “சிலி சிலி” பைகளை இலவசமாக வழங்க வேண்டாம். பைக்காக அறவிடப்படும் விலையை வர்த்தக நிலையத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்தி, அறவிடப்பட்ட தொகையை நுகர்வோரின் பற்றுச்சீட்டில் குறிப்பிடுவதை உறுதிப்படுத்துங்கள். மேலும், பைகள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான உரிய பற்றுச்சீட்டுகள், இன்வொய்ஸ்கள் மற்றும் விநியோகத் தகவல்களை முறையாகப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.
👥 நுகர்வோருக்கு: “சிலி சிலி” பைக்காக பணம் அறவிடப்பட்டால், அதன் விலை வர்த்தக நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும், அறவிடப்பட்ட தொகை உங்களுக்கு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்கவும்.
♻️ இயன்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை எடுத்துச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். இதன் மூலம் தேவையற்ற பொலித்தீன் பயன்பாட்டைக் குறைப்பதில் அனைவரும் பங்களிக்க முடியும்.
⚖️ பணிப்புரை இலக்கம் 95ஐ மீறும் வர்த்தகர்கள் தொடர்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை










