சுகாதாரப் பரிந்துரைகளின்படி, உலகளாவிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, தடுப்பூசி ஏற்றுவதில் மூன்றாவது டோஸ் தேவைப்டுமாக இருந்தால், அதனை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று பணிப்புரை விடுத்தார்.
உலகின் பல முன்னணி நாடுகள் மூன்றாவது டோஸுக்கான தடுப்பூசிகளை தற்போது கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளன. இலங்கையும் இது குறித்து பிரத்தியேக கவனம் செலுத்தி மூன்றாவது டோஸ் வழங்குவது அவசியமானது.
உலகெங்கிலும் தடுப்பூசிகளுக்குப் பெரும் கேள்வி உள்ளது. இந்தப் போட்டி சூழ்நிலையில், இலங்கைக்கு அதிகளவு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள பல நாடுகளின் தலைவர்களுடன் தானே நேரடியாக கலந்துரையாடி உதவி கோரியுள்ளதனையும் அதிகாரிகளிடம் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
அந்தவகையில், மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள தடுப்பூசிகளை வெளிப்படைத்தன்மையுடனும் முறையாகவும் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தற்போது அதிகளவு தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்ற வேண்டியது அவசியமானது என்பதனை சுட்டிக்காட்டினார்.
அதே நேரம், தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
அதிகளவானவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவதன் மூலமே கொவிட் நோய்த்தொற்று பரவுவதையும், மக்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாவதையும் தடுக்க முடியும்.
முறையான தடுப்பூசி ஏற்றல் மற்றும் தடுப்பூசி ஏற்றிக்கொள்வோர் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதற்காக – தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) பிரத்தியேக மென்பொருளை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் – கிராம சேவகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு திகதி மற்றும் நேரத்தை மக்கள் இலகுவாக ஒதுக்கிக் கொள்ள முடியும்.
தற்போது தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் மற்றும் எதிர்காலத்தில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள இருக்கின்றவர்கள் அனைவரையும் பற்றிய தகவல்களை உள்ளடக்கவும், தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிச் சான்றிதழை வழங்கவும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
கொவிட் நோய்த்தொற்று அல்லாமல் மரணிப்பவர்களுக்கான இறுதிக் கிரியைகளும், பி.சி.ஆர். பரிசோதனைகளின் காரணமாகத் தாமதப்படுகின்றன என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதைக் கருத்திற் கொண்டு, வேறு காரணங்களால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை 24 மணி நேரத்திற்குள் நடத்திமுடிக்க நடவடிக்கை எடுக்க கொவிட் ஒழிப்பு சிறப்பு குழு முடிவு செய்தது.
அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, பிரசன்ன ரனதுங்க, ரோஹித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்கள் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, எனது செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் (ஓய்வு பெற்ற) மேஜர் ஜெனரல் வைத்திய நிபுணர் சஞ்சீவ முனசிங்க, முப்படைகளின் தளபதிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோர் நேற்றைய சந்திப்பில் கலந்து கொண்டனர்.