இவ்வருடத்துக்குள் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவதற்கு உத்தேசித்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதற்கான நகர்வுகளை தற்போது திரைமறைவில் முன்னெடுத்துவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இந்நிலையில் இன்று (30) வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெறவுள்ளார்.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் சுதந்திரக்கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட அரசியல் வேலைத்திட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார். மறுநாள் (31) மாத்தளை மாவட்டத்திலும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரச கூட்டணியில் பங்காளியாக அங்கம் வகித்தாலும் சுதந்திரக்கட்சிக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை. இதனால் அக்கட்சி உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். மொட்டு அரசால் முன்னெடுக்கப்பட்ட சில திட்டங்களுக்கும் சுதந்திரக்கட்சி போர்க்கொடி தூக்கியிருந்தது.
இதனால் இரு தரப்புக்கும் இடையிலான உறவு நல்லதாக இல்லை. எனவேதான் மாகாணசபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட்டு, பலத்தைக்காட்ட முற்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.