ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காதிருக்கும் முடிவை நோக்கி மொட்டு கட்சி நகர்ந்து கொண்டிருப்பதாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதன்படி ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை மொட்டு கட்சி களமிறக்கும் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிவரும் கட்சிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களில் பெரும்பாலானவர்கள் ராஜபக்சக்களின்றி தேர்தலை சந்திப்பது சிறந்தது என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அவ்வாறு ராஜபக்ச அணியுடன் பயணித்தால் வெளியில் இருந்தே ஆதரவு வழங்க நேரிடும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் மொட்டு கட்சி கடுப்பில் உள்ளது.
ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின்போதுகூட இது தொடர்பில் பஸில் ராஜபக்ச கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ரணிலுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற நாமல் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் முன்வைத்துள்ள யோசனையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மொட்டு கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த சிறு கட்சிகளின் ஆதரவையும் ரணில் விக்கிரமசிங்க தனித்தனியே பெற்றுள்ளமையும் ராஜபக்ச தரப்பை சினம்கொள்ள வைத்துள்ளது.
இவ்வாறான அரசியல் முறுகல்களாலேயே ரணிலுக்கான ஆதரவை ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சி வழங்காதிருக்கும் என தெரியவருகின்றது. எனினும், மொட்டு கட்சியை சமரசப்படுத்தும் முயற்சியில் ரணிலின் பிரதிநிதிகள் ஈடுபட்டுவருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்பதால் மொட்டு கட்சியின் ஆதரவு அவசியம் என ஜனாதிபதி கருதுகின்றார் எனவும் தெரியவருகின்றது.
அதேவேளை, மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியிட்டால் அது எதிரணியின் வெற்றியை முன்கூட்டியே உறுதிப்படுத்திவிடும் என ஆளுங்கட்சியில் உள்ள சில அரசியல் பிரமுகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.