தமிழர்களுக்கு நீதியை வழங்க என்.பி.பி. அரசும் மறுப்பு: சாணக்கியன் குற்றச்சாட்டு!

 

” இலங்கையில் கடந்தகால அரசாங்கங்களைப் போலவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு மறுத்துவருகின்றது. இதற்கான ஆரம்பமே ஜெனிவா தொடரில் அரங்கேறியுள்ளது.” – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே சாணக்கியன் இவ்வாறு கூறினார்.

” இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை, கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக நிராகரித்துவருகின்றனர் என்பதற்கு இதுவும் சான்றாகும்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையையே கோரிவருகின்றனர். சர்வதேசத்தின் உதவியுடன்தான் உண்மையை கண்டறிய முடியும், நீதி கிடைக்க முடியும் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

தமிழ் மக்களுக்கான நீதியை மறுத்ததுபோன்றே இந்த அரசும் செயற்படுகினறது. அதற்குரிய ஆரம்பக்கட்டமே இது.

ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வந்தார். சர்வதேச மைதானத்துக்குரிய பணியை ஆரம்பித்து வைத்தார். கடந்த கால அரசுகளும் அபிவிருத்திகளை செய்தன. ஆனால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக நீதி மற்றும் நிரந்தர அரசியல் தீர்வு என்பனவே தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளாகும்.

அவற்றை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் தமிழர்களின் ஆதரவை இழக்க நேரிடும்.” – எனவும் சாணக்கியன் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles