‘தமிழர்களை கொச்சைப்படுத்தியவர்கள் ஐ.தே.கவில் இருந்து வெளியேறியுள்ளனர்’

ஐக்கிய தேசியக் கட்சியை தமிழர்கள் மத்தியில் கொச்சைப்படுத்திய தரப்பினர் தற்போது மாற்று கட்சியை நோக்கி நகர்ந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.

இரத்தினபுரி காளி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ பெருமாள் சர்மாவை இன்று (21) சந்தித்து ஆசிப் பெற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மலையகத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் தமிழ் இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேடி முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் சென்ற போது, அவர் மலையக தமிழர்களை நடத்திய விதம் தொடர்பிலான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டியே அவர் இதனைக் கூறினார்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழர்கள் ஆரம்பம் முதலே புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களை அவ்வாறான தலைவர்களே இன்று வரை புறக்கணித்து வந்துள்ளமை அந்த காணொளியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான புறக்கணிப்புக்களை மேற்கொண்டு, தமிழர்களை கீழ்தரமாக நடத்திய அரசியல்வாதிகளுடனேயே ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழர்களை இவ்வாறு நடத்தியவர்களுக்கு மீண்டும் வாக்களித்தால், எதிர்காலத்தில் இரத்தினபுரி வாழ் தமிழ் சமூகம் தொடர்ச்சியாக புறக்கணிப்புக்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என எஸ்.ஆனந்தகுமார் அச்சம் வெளியிட்டார்.

வேலைவாய்ப்புக்கள், வீடமைப்பு திட்டங்கள், போக்குவரத்து வசதிகள், குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட உரிமை பிரச்சினைகளுக்கு ஏனைய மாவட்டங்களில் தீர்வுகள் ஓரளவேனும் கிடைக்க பெற்றுள்ள போதிலும், இரத்தினபுரி வாழ் தமிழர்களுக்கு சிறிதளவேனும் அவை இன்று வரை கிடைக்கவில்லை என அவர் கவலை வெளியிட்டார்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள லயின் குடியிருப்புக்களில் மக்கள் வாழ முடியாத நிலையில் உள்ளதை, ஆட்சியிலிருந்த எந்தவொரு தமிழ் மக்கள் பிரதிநிதியும் கவனத்தில் கொள்ளாத நிலையில், அவர்கள் இன்று மக்கள் மத்தியில் தயக்கமின்றி வாக்கு கேட்பது எவ்வாறு என எஸ்.ஆனந்தகுமார் கேள்வி எழுப்பினார்.

மக்களுடன் களத்திலிருந்து செயற்படும் புதிய மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் ஊடாகவேனும் இரத்தினபுரி மாவட்ட தமிழர்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.

Related Articles

Latest Articles