தமிழின அழிப்புக்கான சான்றுகள் செம்மணியில் இருந்தே ஆரம்பம்!

“தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டமைக்கான சான்றுகள் செம்மணியில் இருந்தே ஆரம்பமாகின்றன எனத் தோன்றுகின்றது. ஆகவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஒஸ்லாப் என்கின்ற சான்றுகளைச் சேகரிக்கின்ற பொறிமுறை ஒன்று உள்ளது. அதை வரவழைத்து இங்கு நடந்த விடயங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.”

– இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“செம்மணி மனிதப் புதைகுழியில் ஸ்கானிங் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. ஸ்கானிங் தரவுகள் ஆராயப்பட்டு மனித என்புத் தொகுதிகள் வேறு எந்த இடங்களில் இருக்கின்றன என ஆராய்ந்து அங்கே அகழ்வுகளை மேற்கொள்வார்கள்.

மேலும் நாளை (இன்று) செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தடயப் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் 130க்கும் மேற்பட்ட மனித என்பு தொகுதிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் மனித என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்ட வண்ணமே உள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் பின்னணியாக, 1999ஆம் ஆண்டு சோமரத்ன ராஜபக்ஷவின் சாட்சியத்தின் பிரகாரம் முதலில் 15 என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளின் போது நூற்றுக்கும் மேற்பட்ட மனித என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

இராணுவ உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கமைய 300 தொடக்கம் 400 வரையான உடல்கள் புதைக்கப்பட்டதாக 1999களில் சோமரத்ன ராஜபக்ஷ கூறிய கருத்துக்களுடன் இப்போதைய மனித என்புத் தொகுதிகள் ஒத்துப்போகின்றன.

உண்மையைக் கண்டறிதல் பொறிமுறையில், இலங்கையில் நிலத்துக்குக் கீழேதான் பல உண்மைகள் புதைந்திருக்கின்றன. ஆகவே, மனிதப் புதைகுழிகள் தோண்டப்படுகின்ற விடயம் உண்மையைக் கண்டறியும் செயல்முறையில் மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றது.

செம்மணிப் புதைகுழி மழுங்கடிக்கப்படுமா என பலருக்குச் சந்தேகங்கள் உள்ளன. எனவேதான் அகழ்வுப் பணிகளை வெளிப்படைத் தன்மையோடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாம் ஆரம்பம் முதலே கூறி வருகின்றோம்.

செம்மணிப் புதைகுழி தொடர்பில் சர்வதேச மன்றுக்கு சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக கிருசாந்தி படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ சொன்னதாகப் பத்திரிகைகள் வாயிலாக அறிந்து கொண்டோம். அது உண்மை எனில் அவர் சர்வதேச மன்றில் சாட்சியம் அளிப்பதற்கு நாம் வழி செய்து கொடுக்க வேண்டும். இது ஒரு திருப்புமுனையான சந்தர்ப்பமாக நாங்கள் கருதுகின்றோம்.

தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டமைக்கான சான்றுகள் இங்கிருந்தே ஆரம்பமாகின்றன எனத் தோன்றுகின்றன. ஆகவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஒஸ்லாப் என்கின்ற சான்றுகளைச் சேகரிக்கின்ற பொறிமுறை ஒன்று உள்ளது. அதை வரவழைத்து இங்கு நடந்த விடயங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அரச அதிகாரிகள் அல்லது அரச திணைக்களங்கள் இதிலே சற்றுப் பின்னடிப்பதாகச் சந்தேகங்கள் சில சம்பவங்கள் மூலமாக எழுகின்றன. எனவே, முழுமையான சர்வதேச மேற்பார்வையோடு வெளிக்கொணரப்பட வேண்டும். சர்வதேச ப்பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

பழைய செம்மணி வழக்கானது கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனை மீள யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றி புதிய செம்மணி வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்பட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles