தமிழ் பேசும் கட்சிகளின் பங்களிப்புடன் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராலேயே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்தில் இதுவரை மூன்று கட்ட பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஏற்பாட்டில் நடைபெறும் இதற்கான சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளில் ஓரங்கமாக , அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவிடம் ஒருமித்தக் குரலில் கோரிக்கை விடுப்பதற்கும், அதற்கான ஆவணத்தை தயாரிப்பதற்கும் ஆரம்பக்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமது தரப்புக்கும் அழைப்பு விடுத்தால் – அதில் இ.தொ.கா. பங்கேற்கும் என அதன் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று அறிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இ.தொ.காவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
