தமிழ் பொதுவேட்பாளர் சதி நடவடிக்கை!

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரமானது திட்டமிட்ட சதி நடவடிக்கையாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

ஒற்றையாட்சிமுறை நீக்கப்படும் பட்சத்திலேயே ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில்  உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“ சிங்கள சமூகத்துடன் சேர்ந்து இந்நாட்டை கட்டியெழுப்ப தயாராக இருக்கின்றோம். அது நடைபெற வேண்டுமெனில் ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு எங்களுடைய தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் ஒரு சமஷ்டி அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அதற்கான நாள்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. ஒற்றையாட்சி முறைமையை ஒழித்து சமஷ்டி அரசமைப்பை கொண்டுவருவதற்குரிய துணிச்சலான முடிவை ஜனாதிபதி வேட்பாளர்கள் எடுக்க வேண்டும்.

வடக்க, கிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கையாகும். ஏனெனில் ஒற்றையாட்சியை பலப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்ட வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்ககூடாது.  2005 இல் தேசிய தலைவர் பிரபாகரன் எடுத்த முடிவின் அடிப்படையில் அந்த தேர்தலை நாம் புறக்கணிக்க வேண்டும். பேரம் பேசுதலுக்கான ஒரு ஆயுதமாக அதை நாம் கருதுகின்றோம்.

தேர்தல் நடத்தே ஆகவேண்டும், அதை நாம் புறக்கணிக்கவும் வேண்டும். எங்களுடைய வாக்குகள் உங்களுக்கு தேவையெனில் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்பது எமது அணுகுமுறையாக இருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழ் மக்களுள் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி தொடர்பில் வெறுப்படைந்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகளையும், சிவில் அமைப்புகளையும் வைத்துக்கொண்டு பொதுவேட்பாளர் என்ற ஒரு சதி அரங்கேற்றப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு கால நீடிப்பு வழங்க வேண்டும் என கூறுகின்ற வடக்க, கிழக்கை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அங்கே பொதுவேட்பாளர் வேண்டும் எனக்கூறி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுகின்றனர்.

தமிழர்கள் பகிஷ்கரிப்பு என்ற ஒரு ஆயுதத்தை கையில் எடுக்கக்கூடாது என்ற தேவைப்பாடு ரணில், சஜித், அநுரகுமார ஆகியோருக்கு உள்ளது. அதை தோற்கடிக்கவே பொதுவேட்பாளர் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles